வடகொரிய அனுப்பிய குப்பை பலூன்: சோல் கட்டடத்தின் மேல் தீ
சோல்: வடகொரிய அனுப்பிய குப்பை நிறைந்த பலூன் ஒன்று, தென்கொரியத் தலைநகர் சோலில் கட்டடம் ஒன்றின்மீது இறங்கி அங்கு தீ மூண்டது.உள்ளூர் தீயணைப்பு நிலையம் ஒன்று திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 16) இத்தகவலை வெளியிட்டது. இந்த பலூன் உட்பட பியோங்யாங் இவ்வாண்டு 5,000க்கும் அதிகமான குப்பையைக் கொண்ட பலூன்களை தென்கொரியாவை நோக்கி அனுப்பியுள்ளது. தென்கொரியாவும் பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.“செப்டம்பர் 15ஆம் தேதியன்று இரவு 9.04 மணியளவில் சோலின் மேற்குப் பகுதியில் உள்ள வர்த்தகக் கட்டடம் ஒன்றின் மேல் தீ மூண்டது,” என்று சோலின் காங்சியோ தீயணைப்பு நிலையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. தீ, 18 நிமிடங்களுக்குள் அணைக்கப்பட்டது என்றும் 15 தீயணைப்பு லாரிகளுடன் 56 பணியாளர்கள் தீயணைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும் நிலையம் தெரிவித்தது. உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்று அது குறிப்பிட்டது.ராணுவ அதிகாரிகளும் காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட பலூனை எடுத்துச் சென்றனர். பலூன் தற்போது சோதனையிடப்பட்டு வருகிறது.வடகொரியா, ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) இரவு கிட்டத்தட்ட 120 குப்பை பலூன்களை எல்லைப் பகுதியை நோக்கி அனுப்பியது. அதற்கு முந்தைய நாள் 50 பலூன்கள் அனுப்பப்பட்டன. தென்கொரிய ராணுவம் திங்கட்கிழமையன்று இத்தகவல்களை வெளியிட்டது.