செஸ் ஒலிம்பியாட்: இந்திய ஆண்கள் அணி சீனாவுடன் இன்று மோதல் /Chess Olympiad Indian men's team clash with China today
புடாபெஸ்ட்:45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் நேற்று முன்தினம் ஓபன் பிரிவில் நடந்த 6-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி 3-1 என்ற கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது. தொடர்ந்து 6 சுற்றுகளிலும் வெற்றிகளை குவித்த இந்தியா 12 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும்.இந்த நிலையில் இன்று நடைபெறும் 7-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள சீனாவை எதிர்கொள்கிறது. இந்திய வீரர்கள் அர்ஜூன் எரிகாசி, குகேஷ் இருவரும் இதுவரை 5 ஆட்டத்தில் களம் கண்டு 4 வெற்றி, ஒரு டிராவுடன் அணிக்கு வலுசேர்த்துள்ளனர். பிரக்ஞானந்தாவும் (2 வெற்றி, 3 டிரா) நல்ல நிலையில் உள்ளார்.இன்றைய ஆட்டத்தில் குகேஷ், உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான மோதல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இவர்கள் இருவர் தான் நவம்பர்- டிசம்பரில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நேருக்கு நேர் மோத இருக்கிறார்கள். அதனால் இன்றைய ஆட்டத்தில் யாருடைய கை ஓங்கப்போகிறது என்ற ஆவல் செஸ் பிரியர்களை தொற்றிக் கொண்டுள்ளது.பெண்கள் பிரிவிலும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்துகிறது. 6 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கும் இந்தியா 7-வது சுற்றில் ஜார்ஜியாவுடன் (11 புள்ளி) மோதுகிறது. இவ்விரு ஆட்டங்களும் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.