சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி இருக்கும்? ஒரு பார்வை/ How is the chennai chepauk pitch? A review
சென்னை சேப்பாக்கத்தில் செம்மண் நிற ஆடுகளம் இந்தியா- வங்காளதேசம் டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பவுன்சுடன் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். கருமைநிற ஆடுகளம் தான் சுழலுக்கு நன்கு கைகொடுக்கும். ஆனால் சென்னையில் கடுமையான வெப்ப நிலை காணப்படுவதால் ஆடுகளம் சீக்கிரமாக சிதைவதற்கு வாய்ப்பு உண்டு. அவ்வாறான சூழலில் சுழற்பந்து வீச்சும் முக்கிய பங்கு வகிக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர்.சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் கண்ணோட்டம்: இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மைதானங்களில் ஒன்று சேப்பாக்கம் ஸ்டேடியமாகும். 1934-ம் ஆண்டு டெஸ்ட் போட்டி முதல் முறையாக இங்கு நடந்தது.கடைசியாக இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தற்போது 3 ½ ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் முதல் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறும் 35-வது டெஸ்டாகும்.இதுவரை நடந்த 34 டெஸ்டில் இந்தியா 15-ல் வெற்றி பெற்றது. 7 டெஸ்டில் தோற்றது. 11 போட்டி 'டிரா' ஆனது. ஒரு டெஸ்ட் 'டை' ஆனது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 1986-ம் ஆண்டு மோதிய போட்டி, 'டை' யில் முடிந்தது. இது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டாகும். வெளிநாட்டு அணிகளில் இங்கிலாந்து அதிகபட்சமாக 11 டெஸ்ட் சேப்பாக்கத்தில் விளையாடி உள்ளது. வங்காளதேச அணி முதல் முறையாக இங்கு ஆடுகிறது.சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இந்திய அணி 1977-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 83 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராகும்.கவாஸ்கர் 12 டெஸ்டில் விளையாடி 1018 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதில் 3 சதம் அடங்கும். அதற்கு அடுத்தபடியாக டெண்டுல்கர் 970 ரன் (10 டெஸ்ட்) எடுத்துள்ளாா்.ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன் எடுத்தவர் வீரேந்தர் ஷேவாக். அவர் 2008-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக கருண் நாயர் 303 ரன் (2016, இங்கிலாந்துக்கு எதிராக) எடுத்து இருந்தார். இந்த இருவர் மட்டுமே சேப்பாக்கத்தில் டிரிபிள் செஞ்சூரி அடித்தவர்கள் ஆவார்கள். டெண்டுல்கர் அதிகபட்சமாக 5 சதம் அடித்துள்ளார்.கும்ப்ளே 48 விக்கெட் (8 டெஸ்ட்) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். ஹர்பஜன்சிங், 42 விக்கெட்டும், கபில்தேவ் 42 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.வினோ மன்காட் 55 ரன் எடுத்து 8 விக்கெட் வீழ்த்தியது இன்னிங்சின் சிறந்த பந்து வீச்சாகும். ஹிர்வாணி 16 விக்கெட் வீழ்த்தியது ஒரு டெஸ்டின் சிறப்பான நிலையாகும்.