அடுத்த வாரம் மோடியைச் சந்திப்பேன்: டிரம்ப்

  தமிழ் முரசு
அடுத்த வாரம் மோடியைச் சந்திப்பேன்: டிரம்ப்

ஃபிலின்ட்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த வாரம் தம்மைச் சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.முன்னாள் அமெரிக்க அதிபரான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த திரு டிரம்ப், வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக்கூடும் என்ற நிலை எழுந்துள்ளது. இந்நிலையில் திரு மோடியின் சந்திப்பு இடம்பெறவிருக்கிறது.“திரு மோடி அடுத்த வாரம் என்னைச் சந்திக்கவுள்ளார். மோடி மிகச் சிறந்தவர்,” என்று மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஃபிலின்ட் நகரில் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் திரு டிரம்ப் தெரிவித்தார். தடையற்ற வர்த்தகம், அமெரிக்கர்களின் வேலைகளைப் பாதுகாப்பது ஆகியவற்றின் தொடர்பில் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது திரு டிரம்ப் அந்த விவரத்தை வெளியிட்டார்.இதுகுறித்து முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு திரு டிரம்ப் தரப்பிலிருந்து யாரும் பதிலளிக்கவில்லை.திரு மோடி, அமெரிக்காவின் வில்மிங்டன் நகரில் நடைபெறவுள்ள குவாட் கூட்டமைப்புச் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு இந்த வார இறுதியில் அமெரிக்கா செல்வார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அக்கூட்டத்தை வழிநடத்துவார்.திரு மோடி, செப்டம்பர் 23ஆம் தேதியன்று நியூயார்க்கில் நடக்கவுள்ள ஐக்கிய நாட்டுப் பொதுச் சபையில் அங்கம் வகிக்கும் சந்திப்பு ஒன்றில் உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை