‘யாகி’ சூறாவளியால் ஆறு மில்லியன் குழந்தைகள் அவதி
பேங்காக்: ‘யாகி’ சூறாவளி ஏற்படுத்திய வெள்ளம், நிலச்சரிவுகளால் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஏறக்குறைய ஆறு மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர் என்று புதன்கிழமை ( செப்டம்பர் 18) ஐநா தெரிவித்தது. இந்தப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றொரு பக்கம் அதிகரித்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு யாகி சூறாவளி தென்கிழக்கு ஆசியாவை புரட்டிப் போட்டது. அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில் வியட்னாம், தாய்லாந்து, லாவோஸ், மியன்மார் உள்ளிட்ட நாடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.தாய்லாந்தில் செப்டம்பர் 18ஆம் தேதி மேலும் சிலர் உயிரிழந்தனர். இதையடுத்து தாய்லாந்தில் இயற்கைப் பேரிடருக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஐத் தொட்டுள்ளது. இவ்வட்டாரம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 537ஐத் தாண்டியுள்ளது.யாகி சூறாவளியால் ஆறு மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. சுத்தமான தண்ணீர், கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, முகாம்கள் இல்லாமல் வெள்ளத்தில் அவர்கள் பாதிக்கப்பட்டனர்.“யாகி சூறாவளி ஏற்படுத்திய சேதத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளும் குடும்பங்களும் அழிவின் விளைவுகளை எதிர்நோக்குகின்றனர்,” என்று கிழக்கு ஆசியா-பசிபிக் வட்டாரத்துக்கான யுனிசெஃப் இயக்குநர் ஜுன் குனுகி தெரிவித்தார். வியட்னாமில் பாதுகாப்பான நீர், சுகாதாரம் இல்லாததால் ஏறக்குறைய மூன்று மில்லியன் பேருக்கு நோய் ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று யுனிசெஃப் குறிப்பிட்டது.மியன்மாரில் வெள்ளத்தால் 400,000 பேருக்கு மேல் வீட்டைவிட்டு வெளியேறினர். ஏற்கெனவே ராணுவத்துக்கும் ஆயுதம் ஏந்திய குழுக்களுக்கும் இடையே மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் சண்டையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புயல், வெள்ளம் அவர்களுடைய இயல்பு வாழ்க்கை மோசமடைந்துள்ளது.இதற்கிடையே உலக உணவுத் திட்டம், இவ்வாரம் மியன்மாரில் அவசரகால உதவிகளைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதன்படி அரை மில்லியன் மக்களுக்கு ஒரு மாதம் பங்கீட்டு முறையில் அது உணவு அளிக்கவிருக்கிறது.பருவநிலை மாற்றம், கடல் வெப்பமடைதல் போன்ற காரணங்களால் யாகி போன்ற மோசமான பருவநிலை சம்வங்களை ஏற்பட்டு வருகின்றன.