‘பணியிலிருக்கும் குடிநுழைவு அதிகாரியிடம் கைப்பேசி கூடாது’
புத்ராஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய முனையம் 1, 2 ஆகியவற்றின் முகப்புகளில் நிற்கும் மேற்பார்வையாளர்கள் உட்பட குடிநுழைவு அதிகாரிகள் பணியில் இருக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்தக்கூடாது என்று மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் அசாம் பாகி பரிந்துரைத்துள்ளார். சட்டவிரோதமாக நாட்டுக்குள் ஆட்களை அழைத்துவர, குடிநுழைவு முகப்புகளில் சேவையாற்றுவோர் உதவி புரிந்தது தெரியவந்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 60 குடிநுழைவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.அதைத் தொடர்ந்து குடிநுழைவுத் துறைக்கு ஆணையம் இப்பரிந்துரையை முன்வைத்துள்ளது.கைப்பேசிப் பயன்பாட்டைத் தடுப்பதன் மூலம், அது அவர்களை வெளிதரப்பினர் தொடர்பு கொள்வதைத் தடுக்க முடியும். பணியில் இருக்கும்போது அவர்களுக்கு வேறு தகவல் தொடர்பு முறைகளும் தேவை என்றார் அவர்.இந்த லஞ்ச ஊழல் ஒழிப்பு அமைப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்த ஆணையம், அவற்றைச் சரிசெய்வதற்கான பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.குடிநுழைவுத் துறை சம்பந்தப்பட்ட 11 முக்கிய பிரச்சினைகளையும் பலவீனங்களையும் ஆணையம் அடையாளம் கண்டுள்ளது என்றும் சேவை முகப்புகளைப் பயன்படுத்தி, அமைக்கும் சட்டவிரோதக் கும்பல், சட்டவிரோதமாக ஆLகளை உள்ளே கொண்டு வர முடிந்தது என்றும் அசாம் கூறினார். புதன்கிழமை (செப்டம்பர் 18) எம்ஏசிசி தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு அசாம் பாகி, தடுத்து வைக்கப்பட்டுள்ள 60 பேரில் சட்டவிரோதக் குடிநுழைவுக் கும்பல் தலைவன் என்று நம்பப்படும் மூத்த குடிநுழைவு அதிகாரியும் ஒருவர் எனத் தெரிவித்தார். 40 வயதைத் தாண்டிய அந்த அதிகாரி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தார். பணியில் ஈடுபட்டுள்ள மற்ற குடிநுழைவு அதிகாரிகளுக்கு லஞ்சம் ஏற்பாடு செய்யும் முக்கிய நபராக அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். “கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரை அத்துறையில் பணியாற்றிய அவர் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் செல்வாக்குப் பெற்றிருந்ததாக நம்புகிறோம். அக்டோபர் முதல் வாரத்தில் அவர் உள்பட நால்வர் மீது குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார் அவர்.ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கிய ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையில் இதுவரை மொத்தம் 60 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அசாம் கூறினார்.குடிவரவு அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம், அழைத்து வரப்படும் வெளிநாட்டினரின் நாட்டின் அடிப்படையில் குறியீட்டுப் பெயர்களைக் கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. நாடுகளைப் பொறுத்து லஞ்சத்தின் அளவு மாறுபடும் என்ற திரு அசாம் சில நாடுகளுக்கான குறியீட்டுப் பெயர்களையும் லஞ்சத் தொகையையும் குறிப்பிட்டார்.பங்களாதேஷியருக்கு ‘ஸ்கூல் பாய்’- 2,500 ரிங்கிட், மியன்மார் நாட்டவர்களுக்கு ‘ஜுண்டா’ -1,500 ரிங்கிட், பாகிஸ்தானுக்கு ‘கார்ப்பெட்’ - 1,300 ரிங்கிட், இந்தியாவுக்கு கிச்சாப், ரொட்டி சனாய் - 800 ரிங்கிட், சீனாவுக்கு லிமாவ்- 350 ரிங்கிட், இந்தோனீசியா சலாக்- 300 ரிங்கிட் என்றார் அவர்.முகப்புகளைப் பயன்படுத்தும் கும்பல்கள் சமூக ஊடகத் தளங்கள் மூலம் தங்கள் சேவைகளை விளம்பரப்படுத்தியதாக அசாம் கூறினார்.மலேசியாவிற்கு வெளிநாட்டினரை அழைத்து வருவதற்கு பொருத்தமான தேதியைக் குறிக்க முகவர்கள் வாட்ஸ்அப் மூலம் குடிநுழைவு அதிகாரிகளைத் தொடர்புகொள்வார்கள். அதிகாரிகள், வெளிநாட்டினரின் கடவுச்சீட்டு விவரங்கள், புகைப்படங்களைப் பெறுவதற்கு முன்னர் ஒரு தேதியைச் சொல்வார்கள்.பின்னர் அவர்கள் செல்ல வேண்டிய முகப்பின் எண்ணை வழங்குவார்கள். அதன்வழியாக எளிதாக வெளியேறும் வெளிநாட்டினரை முகவர்கள் அவர்கள் விரும்பிய இடங்களுக்கு கொண்டு செல்வார்கள் என்று அவர் விவரித்தார்.அதிரடி நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட மொத்தப் பணத்தின் அளவு 1.49 மில்லியன் ரிங்கிட், யுஎஸ் $9,900, தாய் பாட் 5,470 ஆகும். மேலும் ஒன்பது கார்கள், 13 மோட்டார் சைக்கிள்கள், 27 தங்கக் கட்டிகள், 75க்கும் மேற்பட்ட நகைகள், 12க்கும் மேற்பட்ட ஆடம்பரக் கடிகாரங்கள் உள்ளிட்ட பொருள்களும் கைப்பற்றப்பட்டன. மொத்தம் 3.6 மில்லியன் ரிங்கிட் கொண்ட 215 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன என்று திரு அசாம் தெரிவித்தார்.