மசூதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா- Vinayagar Chaturthi festival is celebrated in the mosque

  மாலை மலர்
மசூதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா Vinayagar Chaturthi festival is celebrated in the mosque

பல மொழி, வெவ்வேறு மதம், கணக்கில் அடங்காத சாதிகள் என பலதரப்பட்ட மக்களை கொண்டது தான் இந்திய திருநாடு.சுய லாபத்துக்காக சிலர் மதம், சாதியின் பெயரால் மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் மக்கள் ஒற்றுமையை பேணி காத்து வருவதை மறுக்க முடியாது.அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 44 ஆண்டுகளாக மனதை குளிர்விக்கும் மத நல்லிணக்க நிகழ்வு நடந்து வருகிறது.இந்த மாநிலத்தின் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள கோத்கிண்டி கிராம மக்கள் தான் வியத்தகு ஒற்றுமைக்கு சொந்தக்காரர்கள். இந்த கிராம இஸ்லாமியர்கள் தங்கள் மசூதிக்குள் 'நியூ கணேஷ் மண்டல் குழு' சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின் போது கணபதி சிலையை நிறுவி, 10 நாள் பூஜைக்கு பிறகு நீர்நிலைக்கு எடுத்து சென்று கரைத்து வருகின்றனர். இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் கலந்து கொண்டு மதநல்லிணக்கத்துக்கு மாபெரும் உதாரணமாக திகழ்ந்து வருகின்றனர்.மசூதி சார்பில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி குறித்து நியூ கணேஷ் மண்டல் தலைவர் இலாகி பதான் கூறியதாவது:-ஆண்டு தோறும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சேர்ந்து உற்சாகத்துடனும், பக்தியுடனும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர். இந்த பாரம்பரியம் 1961-ம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது சாங்கிலியில் பலத்த மழை பெய்து உள்ளது. அந்த நேரத்தில் பொது இடத்தில் விநாயகர் சிலை நிறுவிய இந்துக்களை மசூதிக்குள் வந்து கொண்டாடுமாறு இஸ்லாமியர்கள் அழைத்து உள்ளனர். இருப்பினும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மசூதியில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறவில்லை. 1980-ம் ஆண்டு மண்டல் (சிலை நிறுவும் குழு) அமைக்கப்பட்டு மசூதிக்குள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் நல்லிணக்க திருவிழா தொடங்கியது. அது முதல் கடந்த 44 ஆண்டுகளாக மசூதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதன் காரணமாக எங்களுக்குள் எந்த பிரச்சினைகளும் வருவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.மண்டல் நிர்வாகியான ராகுல் கோகடே கூறியதாவது:-1980-ம் ஆண்டு இந்த மதநல்லிணக்க திருவிழா தொடங்கியது. இங்குள்ள மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். ரம்ஜான் நேரத்தில் இந்துக்கள் நோன்பு இருப்பார்கள். விநாயகர் சதுர்த்தி காலத்தில் இந்துக்களுடன் இஸ்லாமியர்களும் விரதம் இருந்து ஒன்றாக சாப்பிடுவார்கள். தீபாவளிக்கு பண்டங்களை பகிர்ந்து கொள்வோம். ரம்ஜானுக்கு அவர்கள் எங்களை பாயாசம் (கீர்) சாப்பிட அழைப்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.கிராமத்தை சேர்ந்த மொசின் பதான் என்ற இஸ்லாமியர் கூறுகையில், "ஒருவர் மற்றொருவரின் மதத்தை மதிக்க வேண்டும் என்பது நமது பாரம்பரியம். எந்த பிரச்சினை என்றாலும் நாங்கள் நேரடியாக பேசி கொள்வோம். எனவே சோதனை காலங்களில் கூட எங்களுக்கு நல்லிணக்கம் நீடித்தது. எங்கள் பகுதியில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜையில் தினந்தோறும் நாங்கள் கலந்து கொள்வோம். சிலை கரைப்பு ஊர்வலத்துக்கும் செல்வோம். சில இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் கூட விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வார்கள்" என்றார்.மற்றொரு மண்டல் உறுப்பினர்கள் கூறுகையில், "விநாயகர் சதுர்த்தி மட்டுமில்லாமல் மொகரம், தீபாவளி, ரம்ஜான் போன்ற பண்டிகைகளையும் இங்கு இந்துக்களும், இஸ்லாமியர்களும் சேர்ந்து கொண்டாடி வருகின்றனர்" என்றார்.இந்து-இஸ்லாமியர்களின் இந்த ஒற்றுமை செய்தியை படிக்கும்போது ஒருகனம் நெஞ்சம் நெகிழ்கிறது அல்லவா!. மத நல்லிணக்கத்துக்கு இதை விட வேறு என்ன சிறந்த உதாரணம் வேண்டும்?. தொடரட்டும் மதங்களை கடந்த ஒற்றுமை பயணம்!.

மூலக்கதை