59 percent Turnout Recorded In Phase 1 Of Jammu And Kashmir Polls/ஜம்மு காஷ்மீர்: முதல் கட்டத்தில் 59 சதவீத வாக்குகள் பதிவு
ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட தேர்தலில் 24 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 26 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்ட தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் 24 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன.முதல் கட்ட தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடந்து முடிந்தது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரவு 7.30 மணி நிலவரப்படி 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதிகபட்சமாக கிஷ்ட்வாரில் 77.23 சதவீதமும், குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46.03 சதவீத வாக்குகளும் பதிவாகின.தேர்தல் அமைதியாக நடைபெற துணை ராணுவப் படையினர், ஜம்மு காஷ்மீர் ஆயுதப் படையினர், போலீசார் ஆகியோர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதியும், மூன்றாம் கட்டமாக அக்டோபர் 1-ம் தேதியும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.