நாடு முழுவதும் புல்டோசர் மூலம் கட்டடங்களை இடிக்க அக்டோபர் 1 வரை உச்ச நீதிமன்றம் தடை

  தமிழ் முரசு
நாடு முழுவதும் புல்டோசர் மூலம் கட்டடங்களை இடிக்க அக்டோபர் 1 வரை உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: மாநகராட்சி சட்டங்களின்கீழ் புல்டோசர் மூலம் கட்டடங்களை இடிப்பதை அக்டோபர் 1ஆம் தேதி வரை நிறுத்திவைக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகளில் குடியிருந்தால் அவர்களது வீட்டை இடிக்கும் பணிகளை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் உத்தரப்பிரதேசத்தில் அதிகளவில் நடைபெறுகிறது. இதேபோல் குஜராத்தின் கேதா மாவட்டத்திலும் ஒருவர் மீது குற்ற வழக்கு பதிவானதால் அவரது வீட்டை புல்டோசர் மூலம் இடிக்கப்போவதாக மாநகராட்சி அதிகாரிகள் அச்சுறுத்தினர். இம்முடிவை எதிர்த்து மனுதாரரும், மற்றொரு நில உரிமையாளரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இந்த மனு நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய், சுதான்சு துலியா, எஸ்விஎன் பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘‘சட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ஒரு நாட்டில், வீடுகளை இடிக்கும் அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது. குடும்பத்தில் உள்ள ஒருவர் சட்டவிதிமுறைகளை மீறினார் என்பதற்காக, அவரது குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும் வீட்டை இடிக்கமுடியாது. குற்றச்செயலில் ஈடுபட்டால், வீட்டை இடிக்கவேண்டும் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை,’’ என நீதிபதிகள் கூறினர்.இந்நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் சாலைகள், நீர் நிலைகள், ரயில்பாதைகள் தவிர மற்ற இடங்களில் புல்டோசர் மூலம் கட்டடங்களை இடிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி சட்டத்தின் படி ஒரு சொத்தை எப்போது, எப்படி இடிக்க வேண்டும் என்பதற்கான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை