ஆறு நாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு

  தமிழ் முரசு
ஆறு நாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு

தனியார், அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஆண்டுக்கு ஆறு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக ‘மணி கண்ட்ரோல்’ செய்தி நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது.பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு, இலவச மாதவிடாய் சுகாதாரப் பொருள்கள் குறித்த மசோதாவை உருவாக்க 18 பேர் கொண்ட குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது.“பரிந்துரைகளைப் பரிசீலித்து வருகிறோம். பெண்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஏற்ற தாழ்வுகளை அனுபவிப்பதால், இந்த முயற்சி பெண் ஊழியர்களுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்படுகிறது. விடுப்பு நீக்குப்போக்கானதாக இருக்கும். பெண்கள் தங்களுக்குத் தேவைப்படும்போது விடுப்பு எடுக்க அனுமதிக்கிறது,” என்று கர்நாடக தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறினார்.“இது முற்போக்கானது மட்டுமல்ல. பெண்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர், குறிப்பாக திருமணத்திற்குப் பிறகு அல்லது குழந்தைகள் இருக்கும்போது கருத்தில்கொள்ள வேண்டிய பல அம்சங்கள் உள்ளன,” என்று லாட் கூறினார்.கடந்த மாதம் ஒடிசா அரசு பெண்களுக்கு ஒருநாள் மாதவிடாய் விடுமுறையை அறிவித்தது. 1992ல் பெண்களுக்கு மாதத்திற்கு இரண்டு நாள்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை பீகார் வழங்கத் தொடங்கியது. கேரளா 2023ல் அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கத் தொடங்கியது.அருணாச்சல பிரதேச எம்.பி. நினோங் எரிங் 2017ல் மாதவிடாய் நன்மை மசோதாவை அறிமுகப்படுத்தினார், இது பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் இரு நாளகள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை.2023 டிசம்பரில், இந்தியாவின் அப்போதைய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மாதவிடாய் என்பது ஒரு குறைபாடு அல்ல என்றும் பெண்களுக்கு இயற்கையானது என்றும் கூறினார். மாதவிடாய் விடுப்பு வழங்குவது பெண்களுக்கு சம வாய்ப்புகளைத் தடுக்கும் என்றார்.‘ஸொமாட்டோ’, ‘ஸ்விக்கி’ போன்ற தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறையை வழங்குகின்றன. உணவு விநியோக நிறுவனமான ‘ஸொமாட்டோ’, ஒவ்வோர் ஆண்டும் பத்து நாள்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை வழங்குகிறது, அதேசமயம் அதன் போட்டியாளரான ‘ஸ்விக்கி’, ஒவ்வொரு மாதமும் இரு நாள்கள் மாதவிடாய் விடுப்பை வழங்குகிறது.உலகளவில், ஜப்பான், தென்கொரியா, ஸ்பெயின், பிலிப்பீன்ஸ், தைவான், ஸாம்பியா, வியட்னாம் போன்ற நாடுகள் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை வழங்குகின்றன.

மூலக்கதை