திருப்பதி லட்டு விவகாரம்: விரிவான விசாரணைக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்து

  தமிழ் முரசு
திருப்பதி லட்டு விவகாரம்: விரிவான விசாரணைக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்து

புதுடெல்லி: புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருப்பது தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தி இருக்கிறார்.கடந்தமுறை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆந்திர மாநிலத்தை ஆண்டபோது விலங்குக் கொழுப்பையும் தரம் குறைந்த பொருள்களையும் பயன்படுத்தி திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்டதாக அண்மையில் திரு நாயுடு குற்றம் சுமத்தியிருந்தார். இதனையடுத்து, “முதல்வர் நாயுடு முன்வைத்திருப்பது மிகக் கடுமையான குற்றச்சாட்டு. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் எவராக இருப்பினும் தண்டிக்கப்பட வேண்டும்,” என்று திரு ஜோஷி தெரிவித்துள்ளார். தனியார் ஆய்வக அறிக்கை ஒன்றைச் சுட்டி, திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க விநியோகம் செய்யப்பட்ட நெய்யில் மாட்டிறைச்சிக் கொழுப்பு, விலங்குக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகத் தெலுங்கு தேசக் கட்சியின் பேச்சாளார் ஆனம் வெங்கட ரமண ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.இதனிடையே, திருப்பதி கோவிலில் பூசாரியாக உள்ள ரமண தீக்சிதுலு, “லட்டு செய்யப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் பல மாசுகள் கலந்திருந்தன. அதன் தரமும் மோசமானதாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே இதனை நான் கவனித்துவிட்டேன். அது குறித்து திருப்பதி தேவஸ்தானத் தலைவரிடமும் அதிகாரிகளிடமும் கூறியும் அவர்கள் செவிமடுக்கவில்லை. அதன் தொடர்பில் நான் தனியாளாகப் போராடி வந்துள்ளேன். இந்நிலையில், புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதும் எல்லாக் குளறுபடிகளையும் சரிசெய்வதாக உறுதியளித்துள்ளது,” என்று சொன்னதாக ‘ஏஎன்ஐ’ செய்தி வெளியிட்டுள்ளது.இந்நிலையில், ஆந்திர முதல்வரின் குற்றச்சாட்டை மறுத்துவரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, இந்த விவகாரத்தில் கண்காணிப்புடன் கூடிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி, ஆந்திர உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதற்கிடையே, தேசிய அளவிலான கோவில் சார்ந்த எல்லா விவகாரங்களையும் ‘சனாதன தருமப் பாதுகாப்பு வாரியம்’ பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆந்திரத் துணை முதல்வரும் ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை