‘உக்ரேனுக்கு அனுப்பப்படும் இந்திய ஆயுதங்கள்’

  தமிழ் முரசு
‘உக்ரேனுக்கு அனுப்பப்படும் இந்திய ஆயுதங்கள்’

புதுடெல்லி: இந்தியாவிடம் பெறும் ஆயுதங்களை ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் உக்ரேனுக்கு அனுப்பிவருவதாகவும் இந்திய அரசு அதில் தலையிட மறுத்துவிட்டதாகவும் வெளியாகி இருக்கும் தகவல்களை பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் நிராகரித்துள்ளது.ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அந்த அறிக்கை ஊகத்தின் அடிப்படையிலானது என்றும் தவறான தகவல் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெளிவுபடுத்தியுள்ளார். “ராய்ட்டர்சின் அறிக்கை, இந்தியா விதிகளை மீறியதாகக் கூறுகிறது. அப்படி ஏதும் நடக்கவில்லை. அந்த அறிக்கை தவறானது, குறும்புத்தனமானது,” என்றார் அவர்.ராணுவ, இரு பயன்பாட்டுப் பொருள்களின் ஏற்றுமதி தொடர்பில் இந்தியா எப்போதும் அனைத்துலகக் கடப்பாடுகளைப் பின்பற்றிவந்துள்ளது என்று திரு ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.முன்னதாக, இந்திய ஆயுதத் தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கிய பீரங்கிக் குண்டுகளை ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் உக்ரேனுக்கு அனுப்புவதாக ராய்ட்டர்ஸ் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) கூறியது.ரஷ்யா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதும் அந்த விவகாரத்தில் தலையிட இந்தியா மறுத்துவிட்டதாக அறிக்கை குறிப்பிட்டது.இந்திய, ஐரோப்பிய அரசாங்கங்கள், தற்காப்புத் தொழில்துறை அதிகாரிகள் என 11 பேரை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் அந்தத் தகவலை வெளியிட்டது.பீரங்கிக் குண்டுகள் இவ்வாறு உக்ரேனுக்கு அனுப்பப்படுவது ஓராண்டுக்குமேல் நடைபெறுவதாகக் கூறப்பட்டது. ஜூலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் சந்தித்தபோது ரஷ்யா இந்த விவகாரம் குறித்துப் பேசியதாகவும் ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறியது.

மூலக்கதை