பழுதான கார் குறித்து எச்சரித்தவர் இன்னொரு கார் மோதி உயிரிழப்பு

  தமிழ் முரசு
பழுதான கார் குறித்து எச்சரித்தவர் இன்னொரு கார் மோதி உயிரிழப்பு

சோல்: சுரங்கப்பாதையில் தமது கார் பழுதாகி நின்றுவிட்டதாக மற்ற வாகனவோட்டிகளுக்கு எச்சரிக்கை செய்த ஆடவர் ஒருவர் இன்னொரு கார் மோதி உயிரிழந்த சம்பவம் தென்கொரியாவில் நிகழ்ந்தது.இவ்விபத்து புதன்கிழமை (செப்டம்பர் 18) அதிகாலை 4 மணியளவில் நேர்ந்ததாகத் தென்கொரியக் காவல்துறை தெரிவித்தது. இதன் தொடர்பில் 20களில் உள்ள இரண்டாவது காரின் ஓட்டுநரிடம் விசாரித்து வருவதாக அதிகாரிகள் கூறினர். அந்த 40களில் உள்ள ஆடவர்மீது தமது கார் மோதியபோது, வழித்தடத்தை அறிவதற்காக தமது திறன்பேசியின் தடங்காட்டியை (ஜிபிஎஸ்) பார்த்ததால் அவர் நின்றிருந்ததைக் கவனிக்கவில்லை என்று அந்த ஆடவர் சொன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. விரைவுச்சாலையில் அமைந்திருக்கும் அந்தச் சுரங்கப்பாதை மூன்று தடங்களைக் கொண்டது என்றும் அதன் நடுத்தடத்தில் அந்த ஆடவரின் கார் பழுதாகி நின்றுவிட்டது என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து, காரைவிட்டு இறங்கிய அவர், தமது கார் பழுதானதைச் சுட்டிக்காட்டி, மற்ற இரு தடங்களில் செல்லுமாறு அவ்வழியே சென்ற மற்ற வாகனவோட்டிகளுக்குச் சைகை காட்டியபடி இருந்தார். ஆயினும், நொடி நேர கவனச் சிதறலால் அவரைக் கவனிக்காமல் இன்னொரு கார் ஓட்டுநர் அவர்மீது மோதிவிட்டார். அதனைத் தொடர்ந்து, அவசர மருத்துவ வாகனம் மூலம் அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆயினும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர்மீது மோதிய கார் ஓட்டுநர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு ஐந்தாண்டுவரை சிறைத்தண்டனை அல்லது 20 மில்லியன் வொன் (S$19,400) அபராதம் விதிக்கப்படலாம்.

மூலக்கதை