$628.7 மில்லியன் கள்ளப்பண பரிவர்த்தனை: ஜப்பானியக் கும்பல் தலைவன் மீது குற்றச்சாட்டு

  தமிழ் முரசு
$628.7 மில்லியன் கள்ளப்பண பரிவர்த்தனை: ஜப்பானியக் கும்பல் தலைவன் மீது குற்றச்சாட்டு

ஜப்பானில் வசிக்கும் குற்றவாளிகளுக்காக ஏறத்தாழ 70 பில்லியன் யென் (S$628.7 மில்லியன்) கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றியதாக ஜப்பானிய சட்டவிரோதக் கும்பலின் தலைவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்துள்ளது.சோட்டாரோ இஷிகாவா, 35, எனப்படும் அந்த ஆடவர், கடந்த பிப்ரவரி மாதம் காவல்துறையின் விசாரணை நடைபெற்றுக்கொண்டு இருந்த வேளையில் ஜப்பானில் இருந்து தப்பி ஓடினார்.ரிவேடன் குரூப் என்று அழைக்கப்படும் குற்றவாளிக் கும்பலை அவர் வழிநடத்தியதாகவும் அந்தக் கும்பலில் 40க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும் நம்பப்படுகிறது.புக்கிட் தீமாவில் உள்ள கொண்டோமினிய வீடு ஒன்றில் வசித்து வந்த அந்த ஆடவர், சிங்கப்பூரில் ரிவேடன் என்னும் மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராக கடந்த மார்ச் மாதம் தம்மைப் பதிவு செய்துகொண்டார்.கடந்த ஈராண்டுகளாக, குற்றவாளிக் கும்பலைச் சேர்ந்த மேலும் பலர், சிங்கப்பூரில் இயங்கும் வேறு சில நிறுவனங்களின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டு இருந்ததை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சோதித்து அறிந்தது.கும்பலின் இரண்டாம் கட்டத் தலைவரான கோசுகே யமாடா என்பவர், ‘கோ எண்டர்பிரைஸ் நெக்ஸ்ட்’ என்னும் சிங்கப்பூர் மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராக 2023 செப்டம்பரில் நியமிக்கப்பட்டார்.சிங்கப்பூரில் இஷிகாவா வசிக்கும் அதே கொண்டோமினியத்தில் உள்ள முகவரியை அவரும் பதிவு செய்திருந்தார். ஜூலை 9ஆம் தேதி கைது செய்யப்பட்டபோது தாங்கள் சிங்கப்பூர்வாசிகள் என்று ஜப்பானிய அதிகாரிகளிடம் அந்த இரு ஆடவர்களும் கூறினர். துபாயிலிருந்து ஜப்பானுக்குத் திரும்பியபோது அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக ஜிஜி பிரஸ் என்னும் ஜப்பானிய செய்தி நிறுவனம் கூறியது.

மூலக்கதை