முன்னாள் முதலாளியின் நடத்தைக்காக ‘ஹாரட்ஸ்’ மன்னிப்பு

  தமிழ் முரசு
முன்னாள் முதலாளியின் நடத்தைக்காக ‘ஹாரட்ஸ்’ மன்னிப்பு

லண்டன்: பிரிட்டனில் பிரபலமான பேரங்காடி நிறுவனமான ‘ஹாரட்ஸ்’ தனது முன்னாள் முதலாளியின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டது.எகிப்து நாட்டைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தர் முகம்மது அல் பாயித் ‘ஹாரட்ஸ்’ நிறுவனத்தை முதலில் வைத்திருந்தார். அவர் தனது நிறுவனத்தில் வேலை செய்த சில பெண் ஊழியர்களை பாலியல் வன்கொடுமை, பாலியல் அச்சுறுத்தல் செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அல் பாயித் 2023ஆம் ஆண்டு அவரது 94 வயதில் காலமானார். இந்நிலையில், அவரது பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்றை தயாரித்தது. அதில் 20க்கும் மேற்பட்ட ‘ஹாரட்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியர்கள் அல் பாயித் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். லண்டன், பாரிஸ், அபுதாபி உள்ளிட்ட பல இடங்களில் அல் பாயித் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் தந்தனர். ‘ஹாரட்ஸ்’ நிறுவனத்தை அல் பாயித் 1985ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை வைத்திருந்தார். அப்போது அவர் செய்த குற்றச்செயல்களை ‘ஹாரட்ஸ்’ நிறுவனம் தடுக்கவில்லை. மாறாக அவர்மீதான குற்றங்களை மூடிமறைக்க ‘ஹாரட்ஸ்’ உதவியதாகக் கூறப்படுகிறது. “தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய ஒரு தனிநபரின் செயல்கள் இவை. அல் பாயித் மீதான குற்றச்சாட்டுகளால் நாங்கள் முற்றிலும் திகைக்கிறோம்” என்று ‘ஹாரட்ஸ்’ அறிக்கை மூலம் மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்தது.

மூலக்கதை