ஆப்கானிடம் அடிமேல் அடி வாங்கிய தென்னாப்பிரிக்கா

  தமிழ் முரசு
ஆப்கானிடம் அடிமேல் அடி வாங்கிய தென்னாப்பிரிக்கா

ஷார்ஜா: அனைத்துலக கிரிக்கெட் அரங்கில் மெல்ல மெல்ல வலிமையான அணிகளுள் ஒன்றாக உருவெடுத்து வருகிறது ஆப்கானிஸ்தான் அணி.வலுவான தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரை அவ்வணி வென்றிருப்பதே இதற்குச் சான்று.ஆப்கான், தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் ஷார்ஜாவில் நடந்து வருகிறது. இம்மாதம் 18ஆம் தேதி நடந்த முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுப்போனது. அப்போட்டியில் முதலில் பந்தடித்த தென்னாப்பிரிக்க அணி 106 ஓட்டங்களுக்குச் சுருண்டது. இந்நிலையில், இரண்டாவது போட்டி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்றது. இம்முறை முதலில் பந்தடித்தது ஆப்கானிஸ்தான். ரஹ்மானுல்லா குர்பாசும் ரியாஸ் ஹசனும் அவ்வணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர். ஹசன் 29 ஓட்டங்களில் வெளியேறியபோதும் குர்பாஸ் நிலைத்து ஆடி சதமடித்தார். அவர் 105 ஓட்டங்களைக் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் இது அவருக்கு ஏழாவது சதம்.ரஹ்மத் ஷா 50 ஓட்டங்களையும் அஸ்மதுல்லா ஒமர்சாய் ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 86 ஓட்டங்களையும் விளாசினர். இதனையடுத்து, ஆப்கான் அணி 50 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர் பந்தடித்த தென்னாப்பிரிக்க அணிக்குத் தொடக்கம் நன்றாக அமைந்தது. அணித்தலைவர் டெம்பா பவுமாவும் டோனி டி ஸோர்சியும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 73 ஓட்டங்களைச் சேர்த்தனர். ஆனாலும், அடுத்த 61 ஓட்டங்களுக்கு அவ்வணி பத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 134 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.இதனையடுத்து, ஆப்கான் அணி 177 ஓட்டங்களில் வெற்றிபெற்றது. தமது 26ஆவது பிறந்தநாளன்று ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆப்கானின் முன்னணிச் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத்கான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.கடைசி, மூன்றாவது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கிறது.

மூலக்கதை