இந்தோனீசியாவில் கடத்தப்பட்ட நியூசிலாந்து விமானி 19 மாதங்களுக்குப் பிறகு விடுவிப்பு

  தமிழ் முரசு
இந்தோனீசியாவில் கடத்தப்பட்ட நியூசிலாந்து விமானி 19 மாதங்களுக்குப் பிறகு விடுவிப்பு

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாப்புவா பகுதியில் கடத்தப்பட்ட நியூசிலாந்து விமானி ஃபிலிப் மெஹ்ர்டன்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். 19 மாதங்கள் நீடித்த கடும் சோதனைக்குப் பிறகும், அவர் நல்ல நிலையில் இருந்ததாக இந்தோனீசிய, நியூசிலாந்து அதிகாரிகள் கூறினர். மெஹ்ர்டன்ஸ், 38, இந்தோனீசியாவின் சுசி ஏர்’ விமான நிறுவனத்திற்காகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, மேற்குப் பாப்புவா தேசிய விடுதலை ராணுவத்தின் கிளர்ச்சிக் குழுவால் ‘பாப்புவா டுகா’ விமான நிலையத்திலிருந்து சென்ற ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி கடத்தப்பட்டார். சனிக்கிழமையன்று (செப்டம்பர் 21) காவல்துறையையும் ராணுவப் படைகளையும் சேர்ந்த கூட்டுப் பணிக்குழுவிடம் மெஹ்ர்டன்ஸ் ஒப்படைக்கப்பட்டார். “இன்று நான் விடுவிக்கப்பட்டுள்ளேன். விரைவில் வீட்டிற்குச் சென்று என் குடும்பத்தைப் பார்க்கமுடியும் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி,” என்று மெஹ்ர்டன்ஸ் செய்தியாளர்களிடம் கூறினார். வெலிங்டனும் ஜகார்த்தாவும் மேற்கொண்ட தீவிரமான அரசதந்திர முயற்சிகளுக்குப் பிறகு மெஹ்ர்டன்ஸ் விடுவிக்கப்பட்டார். மெஹ்ர்டன்சின் விடுதலை, சமரசப் பேச்சுகள் மூலம் சாத்தியமானதே தவிர, வலுக்கட்டாய முயற்சிகள் மூலம் அல்ல என்று இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்தார். “நாங்கள் விமானியின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்தோம். இது ஒரு நீண்டகால முயற்சி. அதிகாரிகளுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று திரு விடோடோ செய்தியாளர்களிடம் கூறினார்.

மூலக்கதை