வெற்றியை நோக்கி இந்திய அணி

  தமிழ் முரசு
வெற்றியை நோக்கி இந்திய அணி

சென்னை: பங்ளாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி வாய்ப்பை இறுகப் பற்றியுள்ளது.கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 19) சென்னையில் தொடங்கிய முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் அஸ்வின் சதமடிக்க, இந்திய அணி 376 ஓட்டங்களைக் குவித்தது. அதனைத் தொடர்ந்து பந்தடித்த பங்ளாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சில் 149 ஓட்டங்களுக்குச் சுருண்டது.இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தனது இரண்டாம் இன்னிங்சில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்களை எடுத்திருந்தது இந்தியா. இந்நிலையில், மூன்றாம் நாளான சனிக்கிழமை இந்திய அணி வீரர்களான ஷுப்மன் கில்லும் ரிஷப் பன்டும் பொறுப்புடனும் அதே நேரத்தில் விரைவாகவும் ஆடி ஓட்டம் குவித்தனர்.முதல் இன்னிங்சில் ஓட்டம் எடுக்காமல் ஆட்டமிழந்த ஷுப்மன் இரண்டாம் இன்னிங்சில் ஆறுதல் தேடிக்கொண்டார். அவர் டெஸ்ட் போட்டிகளில் தனது ஐந்தாவது சதத்தை (119*) நிறைவுசெய்தார்.கிட்டத்தட்ட ஈராண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அரங்கிற்குத் திரும்பிய பன்டும் சதமடித்தது உணர்வுபூர்வமான தருணமாக அமைந்தது. இது அவருக்கு ஆறாவது சதம். அவர் 109 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 287 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில், அத்துடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தார் ரோகித் சர்மா. இன்னும் இரண்டரை நாள் ஆட்டம் எஞ்சியிருந்த நிலையிலும் ஆடுகளம் பந்தடிப்பிற்குச் சாதகமாக இருந்த நிலையிலும் அவரது இந்த முடிவு வியப்பளிப்பதாக அமைந்தது.அதன்பின் 515 ஓட்டங்கள் என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது பங்ளாதேஷ். ஸாகிர் ஹசனும் ஷத்மான் இஸ்லாமும் இணைந்து ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டிற்கு 62 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில், ஸாகிர் ஹசனை வெளியேற்றினார் ஜஸ்பிரீத் பும்ரா. அதன்பின் அஸ்வின் சுழலில் ஷத்மான், மொமினுல் ஹக், முஷ்ஃபிகுர் ரகிம் என மூவர் ஆட்டமிழந்தனர். போதிய வெளிச்சமின்மையால் மூன்றாம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவிற்கு வந்தது. நான்கு விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்களை எடுத்துள்ள பங்ளாதேஷ் அணி போட்டியை வெல்ல இன்னும் 357 ஓட்டங்கள் தேவை.

மூலக்கதை