இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிபர் தேர்தலில் வாக்களிப்பு நிறைவு

  தமிழ் முரசு
இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிபர் தேர்தலில் வாக்களிப்பு நிறைவு

கொழும்பு: இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத பொருளியல் நெருக்கடியைத் தொடர்ந்து, அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு சனிக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற்றது. தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இடதுசாரி கூட்டணித் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்றில் அனுர குமார முன்னணி வகித்ததை ராய்ட்டர்ஸ் சுட்டியது.சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்திய பின்னர், பதவியை தக்கவைத்துக்கொள்வதில் அதிபர் ரணில் கடும் சவாலை எதிர்கொண்டுள்ளார்.இலங்கையின் 22 மில்லியன் மக்களில் 17 மில்லியனுக்கும் அதிகமானோர் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றனர்.உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்களிப்பு தொடங்கிய நிலையில் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். நாடு முழுவதும் வாக்களிப்பு அமைதியான முறையில் நடந்தேறியது. நேரம் செல்ல செல்ல, வாக்குச்சாவடிகளுக்கு வெளியே மக்களின் கூட்டம் நீளத் தொடங்கியது.பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி, 13 மாவட்டங்களில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோன் பிலிப் லூயிஸ் என்பவர் தம் 106வது வயதில் தனது வாக்கைப் பதிவு செய்தார். வாக்களிப்பு தினத்தில் வன்முறைச் சம்பவங்களையும் சட்ட மீறல்களையும் கட்டுப்படுத்த காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதுடன், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கண்காணிப்பில் ஈடுபட்டன.மாலை 4 மணியுடன் வாக்களிப்பு முடிவுக்கு வந்த நிலையில், வாக்குகளை எண்ணும் பணி தொடங்கவிருந்தன. தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) வெற்றியாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கையில் பல்லாண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போர் 2017ல் முடிவுக்கு வந்தது. அப்போது ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர், அந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களை வளப்படுத்திக்கொண்டனர். பொருளியல் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இலங்கை கடனில் மூழ்கியது. அந்நியச் செலாவணி கையிருப்பு இன்றி திவால் நிலைக்கு தள்ளப்பட்டது. விலைவாசி தாறுமாறாக உயர்ந்த நிலையில், மக்கள் போராட்டம் வெடித்தது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பதவியிலிருந்து விலகி நாட்டைவிட்டு தப்பியோடினார். பின்னர் பதவியேற்ற ரணில், இந்தியா, அனைத்துலகப் பண நிதியம், உலக நாடுகளின் உதவியை பெற்று நிலைமையைச் சீர்செய்தார். இப்போது பொருளியல் பிரச்சினைகளில் இருந்து இலங்கை ஓரளவுக்கு மீண்டு வந்துள்ளது. இந்நிலையில், அதிபர் ரணிலின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் மீண்டும் போட்டியிடும் ரணில், தாம் செய்த பொருளியல் மீட்பு செயல்பாடுகளை சீர்துாக்கிப் பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மூலக்கதை