ஆழ்குழியை மூட 3 -6 மாத காலமாகலாம்: பொறுமை காக்க அமைச்சர் வேண்டுகோள்

  தமிழ் முரசு
ஆழ்குழியை மூட 3 6 மாத காலமாகலாம்: பொறுமை காக்க அமைச்சர் வேண்டுகோள்

பெட்டாலிங் ஜெயா: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் மஸ்ஜித் இந்தியா சாலையில் ஏற்பட்ட திடீர் ஆழ்குழியை மூடி, சீரமைக்க மூன்று முதல் ஆறு மாதங்கள் கால வரையறை வகுக்கப்பட்டுள்ளது குறித்து அவ்வட்டார வணிகர்கள் குறைப்பட்டுக்கொண்டனர்.இந்நிலையில், அந்தக் கால வரையறை ஏற்றுக்கொள்ளத் தகுந்ததுதான் என்றும் மஸ்ஜித் இந்தியா சாலை வணிகர்கள் பொறுமை காக்கவேண்டும் என்றும் கூட்டரசுப் பகுதிகளுக்கான அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தபா கேட்டுக்கொண்டுள்ளார். “மூன்று முதல் ஆறு மாதங்கள் என்பது பொருத்தமானதாகத்தான் தெரிகிறது. பயனர்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு வணிகர் சங்கம் பொறுமையோடு இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்,” என்று டாக்டர் ஸலிஹா சொன்னதாக ஃபிரீ மலேசியா டுடே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, அந்தக் கால வரையறை மிகவும் அதிகம் என்று மஸ்ஜித் இந்தியா சாலை வணிகர் சங்கத் தலைவர் அமீர் அலி மைதீன் தெரிவித்திருந்தார். ஆழ்குழியை விரைவில் மூடி, சீரமைக்கும் பணிகளை அதிகாரிகள் விரைவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். சீரமைப்புப் பணிகளுக்கு ஏதுவாக சாலை மூடப்பட்டுள்ளதால் கடைகளில் கிட்டத்தட்ட 80 விழுக்காடுவரை விற்பனை குறைந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி மஸ்ஜித் இந்தியா சாலை வழியே நடந்துசென்றபோது ஏற்பட்ட திடீர் ஆழ்குழியில் விழுந்து, விஜயலட்சுமி என்ற இந்தியப் பெண் காணாமல் போனார். தேடி, மீட்கும் பணிகளை ஒன்பது நாள்களாக மேற்கொண்டும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை