ஜப்பானில் கனமழை: ஆயிரக்கணக்கானோர் வெளியேற உத்தரவு

  தமிழ் முரசு
ஜப்பானில் கனமழை: ஆயிரக்கணக்கானோர் வெளியேற உத்தரவு

தோக்கியோ: ஜப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இஷிகாவா வட்டாரத்திலிருந்து செப்டம்பர் 21ஆம் தேதி பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.முன்னெப்போதும் இல்லாத வகையில் அப்பகுதியில் கனமழை பெய்ததால் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டது இதற்குக் காரணம்.உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் (சிங்கப்பூரில் காலை 10 மணி) அந்த வட்டாரத்தில் பாயும் 10க்கு மேற்பட்ட ஆறுகள் கரையுடைந்ததாக ஜப்பானிய நில அமைச்சின் அதிகாரி கூறினார்.இந்நிலையில், வாஜிமா, சுஸு, நோதோ ஆகிய நகரங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 44,700 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.இஷிகாவா வட்டாரத்திற்கு ஆக உயரிய அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கனமழை பெய்வதாகக் கூறிய அது, மக்கள் தங்கள் பாதுகாப்பில் உடனடிக் கவனம் செலுத்த வேண்டிய சூழல் இது என்றும் கூறியது.வாஜிமா பகுதியில் ஒருவரைக் காணவில்லை. பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. நிலச்சரிவுகளால் சாலைகளின் சில பகுதிகள் துண்டிக்கப்பட்டதாக இஷிகாவா அரசாங்கம் கூறியது.நிலச்சரிவால் ஒரு வீடு பாதிக்கப்பட்டதாகவும் இஷிகாவாவிற்கு வடக்கே உள்ள நீகத்தா, யமகத்தா வட்டாரங்களைச் சேர்ந்த மேலும் 16,000 பேருக்கு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தீயணைப்பு, பேரிடர் நிர்வாக அமைப்பு கூறியது.வாஜிமா, சுஸு ஆகியவை புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகள். அந்த நிலநடுக்கத்தில் 235க்கு மேற்பட்டோர் மாண்டனர்.

மூலக்கதை