சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; மீட்புப் பணியில் தொய்வு

  தமிழ் முரசு
சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; மீட்புப் பணியில் தொய்வு

சாத்தூர்: விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் அருகே முத்தாள்நாயக்கன்பட்டியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் சனிக்கிழமை (28.09.24) காலையில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த தயார்நிலையில் இருந்த பட்டாசுகள், வெடிமருந்துகள் ஆகியவை வெடித்துச் சிதறின. அதனால் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர். கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள வெடிமருந்துகள் தொடர்ச்சியாக வெடித்துக் கொண்டுள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.தீயணைப்புத் துறையினர் கடும் சிரமத்துடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் சுமார் 25க்கும் மேற்பட்ட அறைகளில் விலையுயர்ந்த பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.அவர்கள் சனிக்கிழமை காலையில், வெடி மருந்துக் கலவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதால் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அந்த அதிர்வு உணரப்பட்டதாக ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவ வாகனங்கள் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. பட்டாசு ஆலைக்குள் தொழிலாளர்கள் யாரும் சிக்கி உள்ளனரா என்ற விவரம் வெளியிடப்படவில்லை. தீயை அணைத்த பின்புதான் வெடிவிபத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகுறித்து தெரியவரும்.மாவட்டத்தின் தட்பவெப்ப நிலையின் காரணமாக தொடர்ந்து இங்கு பட்டாசு ஆலைகள் அதிகளவில் செயல்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தரமாக இருக்கும் என்பதால் பல்வேறு இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தீபாவளிக்கு அதிகமாக பயன்படுத்தும் பட்டாசுகள் இங்குதான் தயாரிக்கப்படுகிறது

மூலக்கதை