அரசியல் செல்வாக்கில் வெளிநாடு சென்ற அதிகாரிகளுக்கு விழுந்த அடி - ஜனாதிபதி அநுரவின் அடுத்த அதிரடி! - லங்காசிறி நியூஸ்
இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை மீண்டும் திருப்பியழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனமும் இனி வழங்கப்பட மாட்டாது என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளது.அதனடிப்படையில், போதிய தகுதிகள் இன்றி கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைத் திருப்பியழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவர்கள் மீண்டும் இலங்கைக்கும் வரவழைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.