ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

  தமிழ் முரசு
ஜம்முகாஷ்மீர் விவகாரம்: ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் மன்றக் கூட்டத்தில் மீண்டும் ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையைக் கிளப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்து உள்ளது.ஐநா மன்றத்தின் 79ஆவது அமர்வின் பொது விவாதத்தில், ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தனது விவாதத்தைத் தொடர்ந்தார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்தியா தனது பதிலளிக்கும் உரிமையைப் பயன்படுத்தி கடுமையான எச்சரிக்கையை விடுத்தது. ஐநாவுக்கான இந்தியாவின் பேராளர் பாவிகா மங்களாநந்தன் அந்த எச்சரிக்கையை விடுத்தார். பாகிஸ்தான் கருத்துக்குப் பதில் அளித்து அவர் பேசுகையில், “பயங்கரவாதம், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் நாடுகடந்த குற்றங்களுக்கு உலகளாவிய நற்பெயரைக் கொண்ட, ராணுவத்தால் நடத்தப்படும் ஒரு நாடு, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தைத் தாக்கும் துணிச்சலைக் கொண்டுள்ளது. “இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதம், தவிர்க்க முடியாத சில விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். “2001ல் இந்திய மக்களவை, 2008ல் இந்தியாவின் நிதி தலைநகர் மும்பை, சந்தைகள் மற்றும் யாத்திரை பாதைகளையும் பாகிஸ்தான் தாக்கியது. அத்தகைய நாடு, வன்முறையைப் பற்றி பேசுவது பாசாங்குத்தனமாகும். “அல்காய்தா தலைவர் ஒசாமா பின் லேடனுக்கு நீண்டகாலமாக விருந்தளித்த ஒரு நாடு அது. உலகெங்கிலும் உள்ள பல பயங்கரவாத சம்பவங்களில் பாகிஸ்தானின் கைரேகைகள் உள்ளன.“உண்மையை மேலும் பொய்களால் எதிர்கொள்ள பாகிஸ்தான் முயற்சி செய்யும் என்பதை நாம் அறிவோம்; மீண்டும் மீண்டும் செய்வதால் எதுவும் மாறாது. “எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. மீண்டும் வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. பயங்கரவாதத்துடன் எந்த உடன்பாடும் எங்களுக்கு கிடையாது,” என்று தெரிவித்தார்.

மூலக்கதை