மருத்துவமனை மீதான ர‌ஷ்யத் தாக்குதல்களில் எட்டு பேர் பலி: உக்ரேன்

  தமிழ் முரசு
மருத்துவமனை மீதான ர‌ஷ்யத் தாக்குதல்களில் எட்டு பேர் பலி: உக்ரேன்

கியவ்: உக்ரேனின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது ர‌ஷ்யா அடுத்தடுத்து மேற்கொண்ட தாக்குதல்களில் எட்டு பேர் மாண்டுவிட்டதாக உக்ரேனிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.அந்தத் தாக்குதல்கள் சுமி நகரில் உள்ள மருத்துவமனையின் மீது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.“முதல் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், மருத்துவமனையின் பல தளங்களில் கூரைச் சுவர்கள் சேதமடைந்தன. அப்போது நோயாளிகளையும் ஊழியர்களையும் வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியது,” என்று உக்ரேனிய உள்துறை அமைச்சர் இஹோர் கிலிமெங்கோ டெலிகிராம் செயலிவழி கூறினார். மருத்துவமனையில் இருந்தோர் வெளியேறிக்கொண்டிருந்தபோது ர‌ஷ்யா மறுபடியிம் தாக்குதல் நடத்தியது என்றும் அதில் மேலும் ஐவர் மாண்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.எட்டு பேர் மாண்டதாகவும் 11 பேர் காயமுற்றதாகவும் உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.சுமி நகரம், சுமி வட்டாரம் ஆகியவற்றின் மீது ர‌ஷ்யா அதிகமாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரேனுக்கு அருகே இருக்கும் ர‌ஷ்ய வட்டாரமான கர்ஸ்க்கில் உக்ரேன் கடந்த ஆகஸ்ட் மாதம் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதைத் தொடர்ந்து சுமியில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.சுமி, ர‌ஷ்ய எல்லைக்கு 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இதற்கிடையே, ர‌ஷ்யா பாய்ச்சிய 73 வானூர்திகளில் 69ஐயும் தாழ்வான உயரத்தில் செல்லும் இரண்டு ஏவுகணைகளையும் (cruise missiles) தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரேனிய ஆகாயப் படை சனிக்கிழமையன்று (செப்டம்பர் 28) முன்னதாகக் கூறியது.நள்ளிரவுக்குப் பின் ர‌ஷ்யா மேற்கொண்ட அந்தத் தாக்குதலில் வேறு இரண்டு ஏவுகணைகளும் பாய்ச்சப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. டெலிகிராம் செயலிவழி அறிக்கை ஒன்றின் மூலம் உக்ரேனிய ஆகாயப் படை தகவல் வெளியிட்டது.புறநகர்ப் பகுதிகளிலும் தலைநகர் கியவ்விலும் சுமார் 15 ர‌ஷ்ய வானூர்திகளைத் தங்கள் ஆகாயத் தற்காப்புப் படைகள் அழித்ததாக உக்ரேனிய ராணுவம் குறிப்பிட்டது. கியவ்வின் ஒரு வட்டாரத்தில் சிதைவுகள் விழுந்ததாகத் தகவல் கிடைத்ததென்றும் அது சொன்னது.“அதன் காரணமாக, குடியிருப்பாளர்கள் வசிக்காத கட்டடம் ஒன்று சேதமடைந்தது. உயிர்ச்சேதம் இருந்ததாகத் தகவல் ஏதும் இல்லை,” என்று உக்ரேனிய ராணுவம் டெலிகிராமில் தெரிவித்தது.

மூலக்கதை