கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து: பிரேமலதா விஜயகாந்த்

  தமிழ் முரசு
கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: திரைப்படங்களில் கேப்டன் விஜயகாந்தின் பாடலை அல்லது சுவரொட்டிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக காப்புரிமை எல்லாம் யாரிடமும் கேட்கமாட்டோம் என்று தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், “கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து. அவர் நடிப்பில் இடம்பெறும் பாடலை யார் வேண்டுமானாலும் காப்புரிமையின்றி பயன்படுத்திக்கொள்ளலாம்,” என்று குறிப்பிட்டுள்ளார். திரையரங்குகளில் கடந்த 20ஆம் தேதி வெளியான ‘லப்பர் பந்து’ படத்தில், நடிகர் அட்டக்கத்தி தினேஷ், தீவிர விஜயகாந்த் ரசிகராக நடித்திருக்கிறார். அவரை பிரபலப்படுத்தும் பாடலாக நடிகர் விஜயகாந்த் நடித்த ‘பொன்மனச்செல்வன்’ படத்தின் ‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்’ என்ற பாடல் ஒலிக்கிறது.இந்தப் பாடல் ஒலிக்கும்போது ரசிகர்களின் ஆரவாரத்தால் திரையரங்கமே அதிர்ந்தது. இதுதான் விஜயகாந்துக்கு உண்மையான அஞ்சலி எனப் பலரும் பாராட்டி வருகின்றனர். சமூக ஊடகங்களிலும் விஜயகாந்தின் புகழ் பரவிவருகிறது.

மூலக்கதை