சாலை விபத்தில் 10,536 பேர் உயிரிழப்பு: தமிழகக் காவல்துறை

  தமிழ் முரசு
சாலை விபத்தில் 10,536 பேர் உயிரிழப்பு: தமிழகக் காவல்துறை

சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் சாலை விபத்துகளில் சிக்கி 10,536 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகக் காவல்துறைத் தலைவர் அலுவலகம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சாலை விபத்துகளைக் குறைக்கப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் மரணம் விளைவித்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஐந்து விழுக்காடு குறைந்ததாகக் கூறப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11,106 பேர் சாலை விபத்துகளில் மாண்டனர். இந்நிலையில், ஜூலை மாதம் வரை வாகனங்களை வேகமாக ஓட்டிச் சென்றதன் தொடர்பில் 105,097 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைப்பேசிகளில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டிச் சென்றதாக 231,624 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. அதேபோல், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 113,777 பேர் பிடிபட்டனர். அளவுக்கு அதிகமான பொருள்களை ஏற்றிச் சென்றதாக 6,944 வழக்குகளும், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் சென்றதாக 74,013 வழக்குகளும் பதிவாயின. தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவர்கள் மீதும், பின்னிருக்கையில் அமர்ந்து சென்றவர்கள் மீதும் மொத்தம் 3,578,760 வழக்குகள் பதிவாகியுள்ளன. காரில் இருக்கை வார் அணியாமல் சென்றதற்காக 339, 434 பேர் பிடிபட்டனர்.மொத்தத்தில் இந்த ஆண்டு இதுவரை மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி வாகனங்களை ஓட்டியதற்காக 76.15 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன.விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 182,375 பேரின் உரிமங்களைத் தற்காலிகமாக ரத்து செய்யுமாறு போக்குவரத்துத் துறைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதன்கீழ், 39,924 பேரின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

மூலக்கதை