ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு - பாதுகாப்பு பணிகள் தீவிரம்

  தினத்தந்தி
ஜம்முகாஷ்மீர் தேர்தல்: இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு  பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்த சட்டப்பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 90 தொகுதிகளை உள்ளடக்கிய சட்டசபைக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.இதையடுத்து முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. 2-ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 26-ந்தேதி நடந்தது. இதில் முதல் கட்ட ேதர்தலில் 61 சதவீதமும், 2-ம் கட்ட தேர்தலில் 57.3 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தது.இதையடுத்து 3-ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்காக பா.ஜனதா, காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் கடந்த 29-ந்தேதி மாலையுடன் ஓய்ந்தது.இந்நிலையில் இறுதிக்கட்டமாக 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதில் காஷ்மீரில் 16 தொகுதிகளும், ஜம்முவில் 24 தொகுதிகளும் அடங்கும்.இந்த 40 தொகுதிகளில் 24 முன்னாள் மந்திரிகள் உள்பட 415 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 39 லட்சத்து 18 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 5 ஆயிரத்து 60 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி மத்திய ஆயுதப்படை, போலீசார் என 400 கம்பெனி பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மூலக்கதை