மீண்டும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

  தமிழ் முரசு
மீண்டும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

கோல்கத்தா: பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மேற்கு வங்கத்தின் பயிற்சி இளநிலை மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) காலை முதல் மீண்டும் ‘முழு பணிப் புறக்கணிப்பு’ போராட்டத்தைத் தொடர்ந்தனர். கோல்கத்தாவின் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப் பட்டதைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் பயிற்சி இளநிலை மருத்துவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி மம்தா பானர்ஜி அரசுக்கு அவர்கள் அழுத்தம் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.பயிற்சி மருத்துவர்களின் எட்டு மணி நேர நீண்ட கூட்டத்திற்குப் பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டது. மருத்துவமனையின் பாதுகாப்பை பலப்படுத்துதல், சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், மருத்துவர்களை அச்சுறுத்தும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.இதுகுறித்து மேற்கு வங்க இளநிலை பயிற்சி மருத்துவர்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றுமுதல் முழு பணி நிறுத்தத்திற்கு திரும்பவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். “அரசிடமிருந்து எங்களின் பாதுகாப்பு, நோயாளிகளுக்கான சேவைகளின் தரத்தை உயர்த்துவது, மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக தெளிவான, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் வரை முழு வீச்சில் போராட்டத்தை நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களில் ஒருவரான அனிகேட் மஹதோ அளித்துள்ள பேட்டியில், “மாநில அரசிடமிருந்து எங்களுக்கு எவ்விதமான நேர்மறையான சமிக்ஞையும் கிடைக்கவில்லை. “எங்களது போராட்டம் 52வது நாளை எட்டியுள்ளது. ஆனால், இன்றும்கூட மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. “இப்போதைக்கு எங்களிடம் இரண்டே வாய்ப்புகள்தான் உள்ளன. ஒன்று போராடுவது; இரண்டாவது பணிக்குத் திரும்புவது. “மாநில அரசிடமிருந்து தெளிவான நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவாதம் தென்படும்வரை முழு வீச்சில் போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளோம்,” என்றார்.பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையில் தன்னார்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.இந்தச் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.கோல்கத்தா பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கோரி பயிற்சி மருத்துவர்கள் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை