இணையவழி மிரட்டல் மூலம் தமிழகத்தில் ரூ.1,100 கோடி மோசடி

  தமிழ் முரசு
இணையவழி மிரட்டல் மூலம் தமிழகத்தில் ரூ.1,100 கோடி மோசடி

சென்னை: இணையவழி மிரட்டல் மூலம் தமிழகத்தில் ரூ.1,100 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் கடந்த செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் மட்டும் இவ்வளவு பெரிய தொகையை பொது மக்கள் பறிகொடுத்து இருப்பதாக மாநில இணைய குற்றத்தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீலிஷா ஸ்டெபிலா திரேசா தெரிவித்துள்ளார்.இணைய குற்றங்களில் ஈடுபடுவோர் தற்போது ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ எனப்படும் (மின்னிலக்க கைது) என்ற புதிய உத்தியைப் பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கலந்தாய்வு கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டார்.“எங்கிருந்தோ முன்பின் அறிமுகமற்ற ஒருவர் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு சி.பி.ஐ. அதிகாரி போல் பேசுவார். செய்யாத குற்றத்தை அப்பாவி பொதுமக்கள் மீது சுமத்தி பணம் பறிப்பதே அவரின் நோக்கமாக இருக்கும். “உங்களுடைய கைப்பேசி எண் சட்டவிரோத பணப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீங்கள் பயங்கரவாதிகளைத் தொடர்பு கொள்வதாக குறிப்பிட்டும் மிரட்டல் விடுக்கப்படும்.“நீங்கள் வெளிநாட்டுக்கு அனுப்பிய தபால் உறையில் போதைப்பொருள் இருந்ததாகக் கூறி மிரட்டுவார்கள். இதன் காரணமாக உங்களை மின்னிலக்க கைது ஆணை மூலம் கைது செய்து இருப்பதாகவும் இது குறித்து யாரிடமும் விவரம் தெரிவிக்கக்கூடாது என்றும் மிரட்டல் விடுக்கப்படும், மீறினால் சிபிஐ அதிகாரிகள் வீட்டுக்கு வருவார்கள் என்று அந்த ஏமாற்றுக்காரர்கள் கூறுவர். ஆனால் இந்த மிரட்டலுக்கு பொது மக்கள் பயப்படத் தேவையில்லை,” என்றார் ஸ்ரீலிஷா.மின்னிலக்க கைது என்பது நடைமுறையில் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும் மிரட்டலுக்குப் பயந்து மோசடிக்காரர்களின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்புவது சரியல்ல என்றும் எவ்வளவு பெரிய குற்றம் புரிந்தவராக இருந்தாலும் அவர்களை கைது செய்வதற்கே காவல் துறையினர் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும் இணைய வழி மிரட்டலின் மூலம் பொது மக்களிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1,100 கோடி ரூபாயில் ரூ.550 கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மேலும் கூறினார்.

மூலக்கதை