ஹாங்காங் சூப்பர் சிக்சஸ்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கும் இந்திய அணி

  தமிழ் முரசு
ஹாங்காங் சூப்பர் சிக்சஸ்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கும் இந்திய அணி

ஹாங்காங்: இவ்வாண்டு நவம்பர் 1 முதல் 3ஆம் தேதி நடக்கவிருக்கும் ஹாங்காங் சூப்பர் சிக்சஸ் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. அத்தொடரில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி பங்கேற்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு ஹாங்காங் சூப்பர் சிக்சஸ் தொடர் நடத்தப்படவில்லை. டி20, டி10 போட்டிகள் அறிமுகமாவதற்கு முன்பே, அதாவது 1992ஆம் ஆண்டிலிருந்தே, குறுகிய நேரம் நடக்கும் இப்போட்டித் தொடர் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் பங்கேற்பை ‘கிரிக்கெட் ஹாங்காங்’ அமைப்பு உறுதி செய்துள்ளது.இந்தியா உள்ளிட்ட மொத்தம் 11 அணிகள் இத்தொடரில் களமிறங்கிவுள்ளன. பரம எதிரியான பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளதால் இந்தியாவுடன் அவ்வணி மோதக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, மகேந்திர சிங் டோனி போன்ற முன்னணி ஆட்டக்காரர்கள் ஹாங்காங் சிக்சஸ் தொடரில் விளையாடியுள்ளனர்.ஓர் அணிக்கு அறுவர், தரப்பிற்கு ஐந்து ஓவர்கள் என மொத்தம் 45 நிமிடங்கள் மட்டுமே சிக்சஸ் போட்டி இடம்பெறும். விக்கெட் காப்பாளர் தவிர்த்து மற்ற ஐவரும் ஆளுக்கு ஓர் ஓவர் வீசவேண்டும். பந்தடிப்பாளர் ஒருவர் அதிகபட்சம் 31 ஓட்டங்களை எடுத்ததும் வெளியேறிவிட வேண்டும். ஆயினும், மற்ற அனைவரும் ஆட்டமிழந்துவிட்டால் அல்லது ‘ரிட்டையர்டு’ முறையில் வெளியேறிவிட்டால் அவர் மீண்டும் களமிறங்கிப் பந்தடிக்கலாம்.

மூலக்கதை