இஸ்ரேல் - ஹமாஸ் போர்: காசாவில் பலி எண்ணிக்கை 42 ஆயிரமாக உயர்வு

  தினத்தந்தி
இஸ்ரேல்  ஹமாஸ் போர்: காசாவில் பலி எண்ணிக்கை 42 ஆயிரமாக உயர்வு

காசா முனை,காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படை, ராணுவ நடவடிக்கை மூலம் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது..அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளில் 33 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் பணய கைதிகள் 101 பேர் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர். இதில், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தி உடன் அந்த அமைப்பு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. காசா முனை மீது ஓராண்டாக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் பாலஸ்தீனத்தின் காசா முனையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் தற்போதுவரை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 42 ஆயிரத்து 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 97 ஆயிரத்து 720 பேர் காயமடைந்துள்ளனர்.அதேவேளை, உயிரிழப்பு, காயம் தொடர்பான தரவுகள் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் கீழ் செயல்பட்டுவரும் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை