சாம்சுங் ஊழியர்கள் போராட்டம்; 7 பேர் கைது, இருவருக்கு சிறை

  தமிழ் முரசு
சாம்சுங் ஊழியர்கள் போராட்டம்; 7 பேர் கைது, இருவருக்கு சிறை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தின் சுங்குவார் சத்திரத்தில் போராட்டம் நடத்தும் சாம்சுங் நிறுவன ஊழியர்களை காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், சாம்சங் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் போராட்டம் தொடர்பாக 7 பேரைக் காவல்துறை கைது செய்தது.காஞ்சிபுரம், செங்கல்பட்டில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்யப்படுவதாக சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அவர்களின் போராட்டப் பந்தலை செவ்வாய்க்கிழமை இரவு அகற்றியதுடன் ஊழியர்கள் சிலரை காவல்துறை வீடு புகுந்து கைது செய்துள்ளது.காவல்துறையினரின் இந்த கைதுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.போராட்டக்காரர்களுடன் மாவோயிஸ்டுகள் ஊடுருவி கலவரம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, புதன்கிழமை காலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் காவல்துறையினர் கடும் சோதனை நடத்தினர். சாம்சங் தொழிற்சாலை அருகே தனியாரின் நிலத்தின் உரிமையாளருடன் அனுமதியுடன் அமைக்கப்பட்டிருந்த போராட்டப் பந்தலை காவல்துறையினர் அகற்றியதை அடுத்து, ஊழியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தை கைவிடுமாறு காவலர்கள் வைத்த கோரிக்கையை ஊழியர்கள் ஏற்க மறுத்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர்.தென்கொரியாவின் சாம்சுங் நிறுவனம் திருப்பெரும்புதூர் சுங்குவார் சத்திரத்தில் இயங்கி வருகிறது. இங்கு குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், தொலைக்காட்சிப் பெட்டி, குளிரூட்டிச் சாதனங்கள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தொழிற்சாலையில் 1,500க்கு மேற்பட்டவர்கள் பணி செய்து வருகின்றனர்.சிஐடியு சார்பில் அமைக்கப்பட்ட தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அமைச்சுக் குழு நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கம் அமைப்பதைத் தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஆனால், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சாம்சங் இந்தியா சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ் நாட்டில் உள்ள சாம்சுங் நிறுவனம், நொய்டாவிற்கு இடமாற்றம் செய்யத் திட்டமிட்டு இருப்பதாக தமிழக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்துப் பேசிய தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “சாம்சுங் ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற அந்நிறுவனம் முன்வந்துள்ளது. சாம்சுங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு இடம்மாறுவதாக வெளியாகும் செய்திகள் தவறானவை. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது,” என்று கூறியுள்ளார்.சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றி வரக்கூடிய ஊழியர்களின் நலன், தமிழகத்தில் படித்துவிட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய இளைஞர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு சிஐடியூ அமைப்பு இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அவர் கூறினார்.நீதிமன்றத்தில் உள்ள இவ்விவகாரத்தில், நீதிமன்றத்தின் முடிவை அரசு ஏற்றுச் செயல்படுத்தும். ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றார் அவர்.சாம்சங் ஊழியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததாகக் கூறி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி, சென்னை உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் வலியுறுத்தி இருந்தார்.அதன்படி இந்த வழக்கு புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது. அப்போது, ஊழியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததாக சிஐடியு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை சிறையில் அடைக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சாம்சங் ஊழியர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தத் தடையில்லை என்று கூறி நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.இந்நிலையில் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் சாம்சங் ஊழியர்கள் இருவருக்குச் சிறைத் தண்டணை விதித்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை