ஜிஐஎஸ்பி நடவடிக்கைகளை நிறுத்துமாறு பேராக் மன்னர் குரல்
ஈப்போ: மலேசியாவின் பேராக் மாநிலத்தின் மன்னரான சுல்தான் நஸ்ரின் ஷா, ஜிஐஎஸ்பி (Global Ikhwan Services and Business Holdings) அமைப்பின் நடவடிக்கைகளை நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபடுமாறு குரல் எழுப்பியுள்ளார். அந்த அமைப்பு, இஸ்லாமிய சமயத்தின் உண்மையான கல்வியிலிருந்து திசை மாறிச் சென்றுவிட்டதாக அவர் கூறினார் என்று பேராக் முதலமைச்சர் செரி சாரணி முகம்மது தெரிவித்தார். பேராக் இஸ்லாமிய சமயப் பிரிவு (JAIPk) தயார்செய்த அறிக்கையை ஆராய்ந்த பிறகு ஜிஐஎஸ்பியின் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என்று மன்னர் எண்ணியதாக திரு சாரணி கூறினார்.“பேராக்கில் பல்வேறு குழுக்கள் தவறான கொள்கைகளைக் கற்பிப்பதாகச் சந்தேகிக்கப்படுகின்றன என்று பேராக் இஸ்லாமிய சமயப் பிரிவு தயார்செய்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது,” என்று திரு சாரணி செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 8) செய்தியாளர்களிடம் விவரித்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.மன்னர் நஸ்ரினிடம் சமர்ப்பிப்பதற்காக ஜிஐஎஸ்பி பற்றிய அறிக்கை ஒன்றை பேராக் இஸ்லாமிய சமயப் பிரிவு தயார்செய்வதாக திரு சாரணி கடந்த வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 4) தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஜிஐஎஸ்பியை வழிகாட்டியாகக் கொண்டிருப்போருக்கு மறுவாழ்வு அளிக்க மாநில அரசாங்கம் சிறப்புக் குழு ஒன்றை அமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.