ஜப்பானிய நாடாளுமன்றத்தின் கீழவை கலைப்பு

  தமிழ் முரசு
ஜப்பானிய நாடாளுமன்றத்தின் கீழவை கலைப்பு

தோக்கியோ: ஜப்பானியப் பிரதமர் ‌ஷிகெரு இ‌ஷிபா, புதன்கிழமையன்று (அக்டோபர் 9) அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையைக் கலைத்தார்.ஜப்பானின் லிபரல் ஜனநாயகக் கட்சியின் (LDP) தலைவராக திரு ‌ஷிகெரு சென்ற மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மக்களிடமிருந்து பெரும்பான்மை ஆதரவைத் தாம் பெறுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். அரசியல் ரீதியாகப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தபோதும் லிபரல் ஜனநாயகக் கட்சியும் அதனுடன் கூட்டணி வைத்துள்ள கொமெய்த்தோ கட்சியும் நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கும் ஆதரவைத் தொடர எண்ணம் கொண்டுள்ளன. அரசியல் நிதி தொடர்பிலான சர்ச்சைக்குரிய விவகாரங்களில் ஆளும் கூட்டணி சிக்கியது.இம்மாதம் 27ஆம் தேதியன்று திடீர் தேர்தல் நடத்த நாடாளுமன்றத்தின் கீழவையைக் கலைக்கப்போவதாக பிரதமர் ‌ஷிகெரு செவ்வாய்க்கிழமை காலை அறிவித்திருந்தார். வரும் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 15) தேர்தல் பிரசாரம் தொடங்கும்.எட்டு நாள்களுக்கு முன்புதான் திரு ‌ஷிகெரு, ஜப்பானியப் பிரதமராகப் பதவியேற்றார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானில் புதிய தலைவர் பொறுப்பேற்றதும் இவ்வளவு குறுகிய காலத்தில் நாடாளுமன்றக் கீழவை கலைக்கப்பட்டதில்லை. லிபரல் ஜனயாகக் கட்சியின் அரசியல் நிதி சர்ச்சையைக் கையாள வகைசெய்யும் அரசியல் சீர்திருத்தம், அதிகரித்துவரும் பொருள் விலையைச் சமாளிக்கப் பொருளியல் ரீதியான நடவடிக்கை எடுப்பது போன்றவை தேர்தல் பிரசாரத்தின்போது முக்கியமாகப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை