மீண்டும் காற்பந்துக் களத்தில் இறங்கும் கிளோப்

  தமிழ் முரசு
மீண்டும் காற்பந்துக் களத்தில் இறங்கும் கிளோப்

மியூனிக்: லிவர்பூல் காற்பந்துக் குழுவின் முன்னாள் நிர்வாகியான யர்கன் கிளோப், ரெட் புல் (Red Bull) குழுமத்தின் உலகளாவியக் காற்பந்துப் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.கிளோப், கடந்த மே மாதம் லிவர்பூல் நிர்வாகிப் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார். அவர் அப்பொறுப்பை வகித்த ஒன்பது ஆண்டுகாலத்தில் லிவர்பூல் மிகச் சிறப்பாகச் செய்தது. கிளோப்பின்கீழ் லிவர்பூல் யூயேஃபா சாம்பியன்ஸ் லீக் கிண்ணம், இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் விருது ஆகியவற்றை வென்றது.ஓய்வாக இருப்பதை விரும்புவதாகவும் எந்தப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பையும் தான் ஏற்க விரும்பவில்லை என்றும் 57 வயது கிளோப் கூறியிருந்தார். லிவர்பூல் நிர்வாகிப் பதவியிலிருந்து விலகப்போவதாக இவ்வாண்டு தொடக்கத்தில் அறிவித்த அவர், தனக்கு ஓய்வு தேவைப்பட்டதாகக் கூறியிருந்தார்.புதிய பொறுப்பின்கீழ் கிளோப், அனைத்துலக அளவில் ரெட் புல் நடத்தும் காற்பந்துக் குழுக்களை நிர்வகிப்பார். ஆர்பி லைப்ஸிக், ஆர்பி சால்ஸ்பர்க், நியூயார்க் ரெட் புல்ஸ் உள்ளிட்ட குழுக்கள் அவற்றில் அடங்கும். பயிற்சி தருவது தொடர்பான அம்சங்கள், விளையாட்டு சம்பந்தப்பட்ட போக்கு, மேம்பாட்டு நடவடிக்கைகள், விளையாட்டாளர்கள் மற்றும் தலைமைப் பயிற்றுவிப்பாளர்கள் குழு மாறுவது ஆகியவற்றின் தொடர்பில் குழுக்களுக்கு ஆலோசனை வழங்குவது கிளோப்பின் பொறுப்புகளில் அடங்கும்.

மூலக்கதை