நாய்களுக்கு அறுவை சிகிச்சையின்றி கருத்தடை
சான்டியாகோ: நாய்க்கு அறுவை சிகிச்சை செய்யாமலேயே கருத்தடை செய்வதற்கு எகாலிட் (Egalitte) என்று பெயரிடப்பட்ட ஊசி மருந்தைக் கண்டுபிடித்துள்ளார் சிலி நாட்டு விஞ்ஞானி பேராசிரியர் லியோனார்டோ சான்ஸ்.அந்த ஊசி மருந்தைப் பயன்படுத்தி முதன்முதலாகச் சிலி நாட்டு டெரியர் நாய்க்கு, மயக்க ஊசியும் அறுவை சிகிச்சையுமின்றி கருத்தடை செய்யப்பட்டது.சான்டியாகோவில் உள்ள அந்த வளர்ப்பு நாய்க்குக் கருத்தடை செய்வதற்கு கால்நடை மருத்துவரும் உதவியாளர்களும் அங்கு நேரடியாகச் சென்றனர். அப்போது, ஃபைன்ட்லே என்ற அந்த நாயை அதன் முதலாளி பிடித்துக்கொண்டு, அதற்குச் சில தின்பண்டங்களைக் கொடுத்துத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு சில நிமிடங்களில் அந்தக் கருத்தடை சிகிச்சை முடிவடைந்து விட்டது. ஊசி குத்தும்போது இலேசாகச் சிணுங்கிய ஃபைன்ட்லே, பின்னர் வாலாட்டியபடி மருத்துவரிடம் விளையாடிச் சென்றதாம்.ஊசி குத்தும்வரை எந்தவித ஆர்ப்பாட்டமும் ஏதுமின்றி அமைதியாக இருந்த அந்த ஃபைன்ட்லேவுக்கு, சிகிச்சைக்குப் பின்னும் அதற்குப் பிடித்த தின்பண்டங்கள் கொடுக்கப்பட்டனவாம்.இந்த மருந்தின் மூலம் இனப்பெருக்கத்தை உண்டு பண்ணும் ஹார்மோனின் கருத்தறிப்புத் திறன் தடுக்கப்படுகிறது. அதனால்தான் ஊசி மருந்துமூலம் இந்தக் கருத்தடை சாத்தியமாகிறது என்றார் தடுப்பூசியை உருவாக்கிய சிலி பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவரும் பேராசிரியருமான டாக்டர் லியோனார்டோ சான்ஸ்.ஊசி போடுவதன் மூலம் விலங்குகளின் இனப்பெருக்கத்தை மிக எளிதாகக் கட்டுப்படுத்தலாம். எனவே, இந்த முறையால் அதிக எண்ணிக்கையிலான விலங்குகளுக்குக் கருத்தடை செய்வது எளிதாகிறது என்றார்.