ஆயுதபூஜை விடுமுறை: சென்னை - கன்னியாகுமரி இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்

  தினத்தந்தி
ஆயுதபூஜை விடுமுறை: சென்னை  கன்னியாகுமரி இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்

சென்னை,தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கிடையே, சென்னையில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06193) இன்று (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 12-ந் தேதி நள்ளிரவு 11.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படுகிறது. மறுநாள் காலை 7.40 மணிக்கு மதுரை ரெயில் நிலையமும், காலை 7.58 மணிக்கு திருமங்கலம் ரெயில் நிலையமும், காலை 8.23 மணிக்கு விருதுநகர் ரெயில் நிலையமும் வந்தடைகிறது. மதியம் 12.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06194) கன்னியாகுமரியில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 13-ந் தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.48 மணிக்கு விருதுநகர் ரெயில் நிலையமும், மாலை 6 மணிக்கு திருமங்கலமும், மாலை 6.25 மணிக்கு மதுரை ரெயில் நிலையமும் வந்தடையும். மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை சென்றடையும்.இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில், 10 இரண்டாம் தூங்கும் வசதி பெட்டிகள், 6 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை