தமிழை வளர்த்த பக்தி இலக்கியங்கள் பக்தி......

  தினத்தந்தி
தமிழை வளர்த்த பக்தி இலக்கியங்கள் பக்தி......

ச்சொல்லிற்கு நம்பிக்கை, பற்று, உயர்ந்த மதிப்பு என்று பொருள் கூறுகின்றது தமிழ் அகராதி.

மனித வாழ்க்கையும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் தொடங்குகின்றது, தொடங்கி  இயங்குகின்றது. பக்தியின் பாதையில் ஆன்மிகப் பயணத்திலும் இந்த நம்பிக்கைதான் வழிநடத்துகின்றது.

இறைவன் உண்டு என்பவர்களுக்கும், இல்லை என்பவர்களுக்கும் அவரவர் நம்பிக்கை தான் காரணம். இதை மிக எளிமையாக கவியரசர் கண்ணதாசன்...

'தெய்வம் என்றால் அது தெய்வம்
சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை'


என்று ஒரு திரைப்படப்பாடலில் பதிவு செய்திருப்பார்.

இந்தக்கருத்தினை கவிச்சக்கரவர்த்தி கம்பனும் ராமாயண யுத்த காண்டத்தில்...

'ஒன்றே எண்ணின் ஒன்றேயாம்
பலவென் றுரைக்கில் பலவே யாம்
அன்றே என்னில் அன்றேயாம்
ஆம் என்றுரைக்கில் ஆமே யாம்'

என்று பாடியிருக்கின்றார்.

இப்படித்தான் இனிய கவிதைகளால் காலத்தை வென்று இருவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். படைத்த இலக்கியமும் இன்றும் இறவாது வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

இந்த இனிய இறைத்தேடலில் பக்தி இலக்கியத்தின் பக்கம் என்பார்வையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்.

பக்தி நெறி

பக்தி இலக்கியம் ஒரு தனி உலகம். இதில்தான் எண்ணில் அடங்கா ஞானிகளும், யோகிகளும், சித்தர்களும், அருளாளர்களும் தோன்றி மண் நிறைந்த இந்த பூமியை புண்ணிய பூமியாய், புனித பூமியாய் மாற்றியிருக்கின்றார்கள்.

வாழ்க்கையில் வறுமை வாட்டுகின்றது. நோய் துயரம் செய்கின்றது. வயதின் மூப்பு முதுமையைத்தருகின்றது. மரணம் அச்சுறுத்துகின்றது.

உண்மைதான், ஆனால் அதற்காக ஒதுங்குவதா, ஓடுவதா, இது கூடாது. நிற்போம், நிலைப்போம். இந்த மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.

இன்பமும் துன்பமும் இறையருளே. தீமை நன்மை முழுவதும் அவன் செயலே. வறுமையும், செல்வமும் அவன் இன்னருளே. நோயைத்தருவதும், அந்நோயை நீக்கி நம்மை ஆட்கொள்வதும் அவன் கடமையே.

இலைகள் காய்ந்து சருகாவதைப்போல் மூப்பும் இயற்கையானது தான். மரணத்தைக்கண்டு ஏன் அஞ்சவேண்டும். மரணம் நெருங்கும் போது எமன் வருவதைத் தடுப்போம்.

இன்று முதல் கொண்டே இறைவனை வழிபட்டால் அவன் நம்மிடம் வந்து காத்தருள்வான். அவனுடைய திருவடி நிழலில் உயிர்கள் இன்பமடையும் என்பதே அவர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கைதான் பக்தி நெறி எனப்படும்.

தமிழில் பக்தி இலக்கியங்கள்


உலகில் எண்ணற்ற மொழிகள் உள்ளன. அவற்றுள் சில மொழிகள் பேச்சு வழக்கும், சில எழுத்து வழக்கும், சில எழுத்தும், பேச்சும் கலந்த வழக்கும் பெற்றுள்ளன. இலக்கிய வழக்குப் பெற்ற மொழிகளுள் சில தனிச்சிறப்புப் பெற்றுள்ளன. அவற்றின் சிறப்புகளைப் பற்றி அறிஞர் தனிநாயக அடிகளார்....

'ஆங்கிலம் வாணிகத்தின் மொழி என்றும், லத்தீன் சட்டத்தின் மொழி என்றும், கிரேக்கம் இசையின் மொழி என்றும், பிரெஞ்சு தூதின் மொழியென்றும், இத்தாலி காதலின் மொழி என்றும் கூறுவது பொருந்தும் என்றால்... தமிழ் பக்தியின் மொழி என்று கூறுவது பொருந்தும்' என்பார்.

இத்தகைய சிறப்புமிக்க பக்தியின் மொழியாகத் தமிழ் மொழி திகழ்வது நமக்கெல்லாம் பெருமைக்குரியதாகும்.

இந்தப்பெருமை சும்மா வந்து விடவில்லை. பக்தியின் வரலாற்றைப் புரட்டுகின்ற போது அடியவர்கள் பட்ட வேதனையும், இறைவன் ஆட்கொண்ட அருள் தன்மையும் நெஞ்சத்தை நெகிழ வைக்கின்றன. நிம்மதியையும் தருகின்றன.

'நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி அல்லவா'.
 
இதோ நிம்மதி தந்த அந்த பெருமை மிகு வரலாறு.

சங்கம் மருவிய காலம் இக்காலத்தில் தமிழகத்தில் களப்பிரர் என்ற அயல் இனத்தவர் ஆட்சியைக் கைப்பற்றினர். அப்போது தமிழர்களின் இரு கண்களாகப் போற்றப்படும் சைவமும், வைணவமும் செல்வாக்கிழந்தன. புறச்சமயங்களான சமணமும், பவுத்தமும் செல்வாக்குப்பெற்றன. இதனால் தமிழும், இலக்கியமும் தேக்கநிலைக்குத் தள்ளப்பட்டன.

கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் களப்பிரர்கள் அரசியல் செல்வாக்கை இழந்தனர். பல்லவர் ஆட்சி செல்வாக்குப் பெற்றது. களப்பிரர்காலத்தில் காலூன்றிய சமணம் பல்லவர் காலத்தில் ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றியது. அப்போதும் தமிழும், தமிழ்ச் சமயங்களும் ஒடுக்கப்பட்டன.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மாபெரும் சமயப்புரட்சி தோன்றியது. இப்பெரும் புரட்சிக்கு மூலகாரணமாகத் திகழ்ந்தவர்கள் சைவ, வைணவ பெரியோர்களே. இவர்கள் சிவன், விஷ்ணு எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று சமய உயிர்ப்பூட்டும் பக்திப்பாடல்களைப் பாடிப்பாடி மக்களைப் பரவசப்படுத்தினர். இதனால் சமய எழுச்சியும், தமிழ் உணர்வும் தழைத்தோங்கின.

இந்த எழுச்சியே பக்தி இயக்கமாக மாறியது.

பக்தி இயக்கத்தால் தமிழகத்தில் தமிழுக்கு மீண்டும் புதுப்பொலிவு ஏற்பட்டது. இயல் தமிழ்ப்பாடல்கள் பண்ணோடு இயைந்து இசைத் தமிழ்ப்பாடல்களாக மாறின. கற்றோர் நாவில் மாத்திரம் நடனமாடிய தமிழ், கல்லாதார் நெஞ்சிலும் களி நடனம் புரிந்தது. வடமொழிச் சொற்களும் தமிழுடன் இணைந்து புதிய மரபினைத் தோற்றுவித்தது. சொல் வளமும் உணர்ச்சிப் பெருக்கும், இசை இனிமையும் சேர்ந்து தமிழ் இலக்கியம் புது மெருகு பெற்றது. இந்த பெருமைமிகு எழுச்சியினால்தான் பல்லவர் ஆட்சிக்காலம் பக்தி இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலம் என்று போற்றப்படுகிறது.

பன்னிரு திருமுறைகள்

தமிழில் தோன்றிய சமயப் பாடல்களைச் சமயத்தின் அடிப்படையில் சைவம், வைணவம் என இருபெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

சிவபெருமானை முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொண்டு பாடல் களைப் பாடியவர்கள் நாயன்மார்களாகவும், திருமாலை முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொண்டவர்கள் ஆழ்வார்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.

நாயன்மார்கள் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறைகளாகவும், ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனவும் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டன.

சோழர் காலம்

'முறை' என்றால் 'நூல்'. 'திருமுறை' என்றால் 'புனிதமான நூல்' என்று பொருள்படும். சிவபெருமானைப் பற்றி சைவ அடியவர்கள் பாடிய பாடல்களே பன்னிரு திருமுறையாகும்.

1.     சம்பந்தர் - தேவாரம்: முதல் மூன்று திருமுறைகள்
2.     திருநாவுக்கரசர் - தேவாரம்: 4, 5, 6 திருமுறைகள்
3.     சுந்தரர் - தேவாரம்: 7 ஆம் திருமுறை
4.     மாணிக்கவாசகர் - திருவாசகம், திருக்கோவையார் 8 ஆம் திருமுறை
5.     ஒன்பது பேர் பாடிய - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு 9 ஆம் திருமுறை
6.     திருமூலர் - திருமந்திரம் 10 ஆம் திருமுறை
7.     பன்னிரண்டுபேர் பாடிய பாடல்கள் - 11 ஆம் திருமுறை
8.     சேக்கிழார் - பெரியபுராணம் 12 ஆம் திருமுறை


இவ்வாறு சோழர்களின் ஆட்சிக்காலத்தில் முதல் பதினோரு திருமுறைகளைத் தொகுத்தளித்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.

பாடல் தரும் இன்பம்


பல்லவர் காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த பவுத்த, சமண சமயங்களை எதிர்த்து மக்களைத் திரட்டுவதற்குக் கலை நயத்துடன் கூடிய பக்திப் பாடல்கள் பயன்பட்டன. நாயன்மார்கள் இசையோடு பாடல்களைப்பாடி கோவில்கள் தோறும் இறைவனை வழிபட்டார்கள். 'ஏழிசையாய் இசைப்பயனாய் உள்ளவன்' என்றார் சுந்தரர்.

'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்' என்று சம்பந்தர் போற்றப்பட்டார். 'தமிழோடு இசைப்பாடல் மறந்து அறியேன்' என்று திருநாவுக்கரசர் வாழ்ந்துள்ளார்.

 இப்படி இவர்கள் பாடிய பாடல்கள் தேவாரம் எனப் போற்றப்படுகின்றது.

தேவாரம் என்னும் சொல்லைத் தே+வாரம் எனப் பிரித்துத் 'தெய்வத்தன்மையை உடைய இசைப்பாடல்கள்' என்றும்,

தே+ஆரம் எனப்பிரித்துத் 'தெய்வத்திற்குச் சூட்டப்பெற்ற பா மாலை' என்றும் பொருள் கூறுவர். இப்படிச் சொல்லைப் பிரித்து பொருள் காண்பதில் தான் இலக்கியச் சுவை பிறக்கின்றது.

திருஞானசம்பந்தர் பிள்ளைப் பருவத்திலேயே இறைவனைப் பாடியவர். ஆடல், பாடல், கலைகளை வழிபாட்டுக்கு உரியவராக மாற்றியவர். சங்க இலக்கியத்தில் பாடப்பெற்ற இயற்கை இன்பத்தை இணைத்தே பாடியவர்.

சமணமும், பவுத்தமும் துறவறத்தையே பேசிக்கொண்டிருந்த அக்காலத்தில் இல்லறத்தின் இனிமையைப் பாடியவர்.

மனித மனதில் உணர்வு உள்ள வரையில் அறத்தை அழிக்க முடியாது. இன்னொருவர் படும் துன்பத்தைக் கண்டால் நெஞ்சில் நெகிழும் மனம் உள்ளவரையில் அறம் இருந்தே தீரும். பசி உள்ளவரையில் சமையலை மறக்க முடியாதது போல மனப்பண்பு உள்ள வரையில் அறத்தை மறக்க முடியாது.

இல்லறத்தில் இருந்து கொண்டே இன்பமாக வாழலாம். எந்தத் தொழிலைச் செய்தாலும் உள்ளத்தை இறைவனுக்கு உரியதாக வைத்து வாழ்க்கை நடத்தினால் போதும் என்று இல்லறத்தின் மேன்மையை போற்றியவர் திருஞானசம்பந்தர்.

அவர் பாடிய,

'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளடும் பெருந்தகை இருந்தே...'


என்ற இப்பாடல் சைவர்களின் திருமணங்களின் போது ஓதுவர்களால் பாடும் பாடலாகும்.

அது மட்டுமல்ல இறைவன் உமையருபாகனாய் இருக்கும் கோலத்தைக் காட்டி மகாகவி பாரதி பாடியதுபோல் ஆணும், பெண்ணும் சரிநிகர் சமமாய் இருந்தால் இல்லறம் நல்லறமாக இருக்கும். அப்படி வாழ்பவர் களுக்கு எந்தக் குறையுமில்லை என்ற நம்பிக்கையையும் தருகின்றது இப்பாடல்வரிகள்.

இதோ, படிக்கின்ற வாசகருக்கும் நம்பிக்கையைத் தரும். இவரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.

இவர் ஒரு முறை பாண்டிய நாட்டிற்குப் புறப்பட்டபோது அந்த நேரம் ஜோதிடப்படி நல்ல நாளாக இல்லை என்று உடனிருந்தவர்கள் குறிப்பிட்டனர்.

அப்போது அவர் எங்கள் தலைவன் சிவபெருமான் பெண்ணை ஒரு பாகமாகக் கொண்டவன். விஷத்தையே உண்டு கண்டம் கறுத்தவன். அதனால் திருநீலகண்டர் என்ற பெயரையும் பெற்றவன். கங்கையையும், பிறைச் சந்திரனையும் தலையில் தரித்தவன். அப்படிப்பட்டவன் என் உள்ளத்தில் குடிபுகுந்துள்ளான்.

அவ்வாறு அவன் என் உள்ளத்தில் இருப்பதால் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாள்களும் ராகு-கேது என்பன போன்ற கோள்களும் ஒரு தீமையும் செய்யாது. அவையெல்லாம் நல்லவைகளே. அடியவர்களுக்கு மிக நல்லவையே என்று அச்சமின்மையையும், ஊக்கமும் பிறக்குமாறு ஒரு பதிகம் பாடியுள்ளார்.

வேயுறு தோளிபங்கன் விட முண்ட கண்டன்
    மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி
    சனி, பாம் பிரண்டும் உடனே
ஆசறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே


என்று இன்னல்கள் நீக்கும் கோளறு திருப்பதிகப் பாடலைப் பாடியுள்ளார்.

இந்தப் பாடலைப்படிக்கும் போது, 'நாள் என் செய்யும், கோள் தான் என் செய்யும்' என்ற நம்பிக்கை நம் மனதிலும் பிறக்கின்றது.

மனதை ஆள்பவர்களால் தான் உலகையும் ஆளமுடியும். இதைத்தான் பக்தி இலக்கியங்கள் பாடல்களாய்ச் சொல்லுகின்றன.
(இன்பம் தொடரும்)

மூலக்கதை