ரகசியமாக கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு 10,000 யூரோ அபராதம்: இத்தாலி அரசு அதிரடி அறிவிப்பு
இத்தாலி நாட்டில் கடந்த 1978ம் ஆண்டு முதல் சட்டப்பூர்வமாக கருக்கலைப்பு செய்துக்கொள்ள பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
அதாவது, குறிப்பிட்ட மருத்துவரிடம் 3 மாதங்களுக்கு முன்னதாக தகுந்த அனுமதி பெற்றுக்கொண்டு பெண்கள் கருக்கலைப்பு செய்துக்கொள்ளலாம்.
மேலும், 3 மாதங்களுக்கு பிறகு கருவில் உள்ள குழந்தைக்கு ஆபத்து ஏற்பட்டு இருந்தால், அல்லது குழந்தை மூலமாக தாயாருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்தால், பெண்கள் கருக்கலைப்பு செய்துக்கொள்ளலாம்.
ஆனால், தற்போது இத்தாலியில் மத நம்பிக்கை காரணமாக கருக்கலைப்பு செய்வது பாவமான செயல் எனக்கூறி அனுமதி வழங்க மறுக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால், வேறு வழியின்று அருகில் உள்ள நகர்களுக்கு சென்ற பெண்கள் ரகசியமாக கருக்கலைப்பு செய்துவருகின்றனர்.
இந்த நிலையை மாற்ற அரசாங்கம் தொடக்கத்தில் பெண்களுக்கு 51 யூரோ அபராதம் விதித்தது. ஆனால், இந்த திட்டம் சரியாக செயல்படாத காரணத்தினால் தற்போது இந்த அபராத தொகையை அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது, மகப்பேறு மருத்துவர்களிடம் சட்டப்பூர்வமாக அனுமதி பெறாமல் ரகசியமாக கருக்கலைப்பு செய்துக்கொண்டால், அந்த பெண்களுக்கு 5,000 முதல் 10,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசின் இந்த அறிவிப்பிற்கு இத்தாலி நாட்டு மகப்பேறு மருத்துவர்கள் சங்க தலைவரான Dr. Silvanna Agatone என்பவர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
‘அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு முற்றிலும் பெண்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது.
கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் சட்டப்பூர்வமாக அனுமதி வழங்க மறுக்கும்போது, பெண்கள் ரகசியமாக தான் கருக்கலைப்பு செய்துக்கொள்ள முடியும்.
சட்டப்பூர்வமாக கருக்கலைப்பு செய்துக்கொள்ள வாய்ப்பு மறுக்கப்படும்போது, விருப்பம் இல்லாத கருவை பெண்கள் சுமக்க வேண்டும் என அரசு எப்படி கட்டாயப்படுத்த முடியும்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசுக்கு எதிராக வலுத்து வரும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க அபராதத்தை அரசு ரத்து செய்யுமா அல்லது செயல்படுத்துமா என்பது இன்னும் ஓரிரு வாரங்களில் உறுதியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.