”ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கடினமான கேள்விகளை எழுப்புங்கள்’’: ஊடகங்களுக்கு ஒபாமா வலியுறுத்தல்
ஊடகத்துறையில் சிறப்பாக செயல்பட்ட ஊடகவியலாளர்களுக்கு Syracuse பல்கலைகழகம் சார்பில் டோனர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நேற்று ஜனாதிபதி ஒபாமா பங்கேற்றுள்ளார்.
தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஊடகத்துறையினரின் பங்களிப்பை ஒபாமா வெகுவாக பாராட்டியுள்ளார்.
அப்போது, ‘உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது என்னிடம் மக்கள் கேட்கும் முதல் கேள்வி ”அமெரிக்க அரசியலில் இப்போது என்ன நடக்கிறது?” என்பதை தான் முதன்மை கேள்வியாக கேட்கிறார்கள்.
உலகம் முழுவதும் பரபரப்பான, நாகரீகம் இல்லாத அரசியல் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் இதுபோன்ற ஒரு அரசியல் நிகழக்கூடாது என்பதை தான் பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
இவர்களின் கேள்விகள் மூலம் அமெரிக்கா மீண்டும் திறம்பட செயல்பட முடியுமா என்ற சந்தேகமும் அவர்களுக்கு எழுந்துள்ளதை பார்க்க முடிகிறது.
அதேசமயம், தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் வேட்பாளர்கள் அதிகளவில் வருமானம் ஈட்டுவதும் தொடர்ந்து வருகிறது.
இதனை தவிர்ப்பதற்கு தற்போது ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடம் கடினமான கேள்விகளை நிருபர்கள் எழுப்ப வேண்டும்’ என ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் இனவெறியை தூண்டும் விதத்திலும், வன்முறையை ஏற்படுத்தும் வகையிலும் பிரச்சாரங்களை ஏற்படுத்து வருவதால் அவருடைய கூட்டங்களில் அடிக்கடி சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையை தொடர்ந்து தான் தற்போது ஒபாமா ஊடகங்களிடம் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
அமெரிக்காவில் வெளியாகும் நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில், ஊடகங்களின் செய்திகளால் டொனால்ட் டிரம்ப் இதுவரை 1.9 பில்லியன் டொலர் மதிப்புள்ள செய்திகளை ஈர்த்துள்ளார்.
இதே வரிசையில், டெட் கிரஸ் 313 மில்லியன் டொலர் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் சுமார் 746 மில்லியன் டொலர் மதிப்பில் ஊடகச் செய்திகளை ஈர்த்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.