தொழில் கண்காட்சியில் பங்கேற்க ஜேர்மனி வரும் ஒபாமா: பொதுமக்களுக்கு கட்டுப்பாடு
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இம்மாத இறுதியில் ஜேர்மனிக்கு வரவுள்ளதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஜேர்மனியின் ஹானோவர் பகுதியில் ஆண்டுதோறும் தொழில்துறை தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்று வருகின்றது.
இந்தாண்டுக்கான கண்காட்சி வரும் 25ஆம் திகதி தொடங்கி 29 திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வரும் 24ம் திகதி ஜேர்மனி செல்லவுள்ளார்.
கண்காட்சியில் கலந்துகொண்ட பின்னர் ஜேர்மனியின் சான்சலர் ஏங்கலா மேர்கலை சந்தித்து அவர் பேசவுள்ளார்.
இதனால் ஜேர்மனியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹானோவர் பகுதியில் வசிக்கும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒபாமாவின் வருகையின் போது அவரை நோக்கி கையசைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என பொலிசார் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் வேலை செய்பவர்கள் அனைவரும் தங்களது விபரங்கள் குறித்து பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒபாமா செல்லும் பாதையில் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்துவது, மொபைல் போன்களின் சிக்னல்களை செயலிழக்க செய்வது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரிகள் தற்போதே ஜேர்மனியில் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.