தானத்தில் சிறந்தது கல்விதானம்: வியக்க வைக்கும் பாகிஸ்தான் ஆசிரியர் (வீடியோ இணைப்பு)

  NEWSONEWS
தானத்தில் சிறந்தது கல்விதானம்: வியக்க வைக்கும் பாகிஸ்தான் ஆசிரியர் (வீடியோ இணைப்பு)

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்றுதரும் செய்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் இஸ்லாமபாத் பகுதியில் வசித்து வருபவர் மொகமது அயூப்.

தீயணைப்பு பிரிவில் வேலை செய்து வரும் அயூப் மாலை 3 மணியாகிவிட்டால் போது போதும் தனது சைக்கிளை மிதித்துகொண்டு அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றுவிடுகிறார்.

பின்னர் அங்குள்ள ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை கற்றுக்கொடுக்கிறார்.

இவ்வாறு கடந்த 30 ஆண்டுகளாக அவர் சேவை செய்துவருகிறார். இதன் காரணமாகவே மாணவர்கள் அவரை ’மாஸ்டர்’ அயூப் என்று அன்புடன் அழைக்கின்றனர்.

இது குறித்து மொகமது அயூப் கூறியதாவது, 30 ஆண்டுகளுக்கு முன்னர் தீயணைப்பு பிரிவில் வேலை கிடைத்ததையடுத்து கிராமத்தில் குடும்பத்தினரை விட்டுவிட்டு நகரத்துக்கு வந்துவிட்டேன்.

வேலை முடிந்ததும் சும்மா இருப்பதால் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பித்து வருகிறேன்.

இங்கு காரை துடைத்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என்று கேட்டேன்

 அதற்கு அந்த சிறுவன், தங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையானது என்றும் அதனால் தான் வேலைக்கு செல்வதாகவும் கூறினார்.

இதையடுத்து அந்த சிறுவனுக்கு புத்தகம், பென்சில் போன்றவை வாங்கிக்கொடுத்து பாடங்களை சொல்லி கொடுத்தேன்.

அடுத்த நாள் அச்சிறுவன் அவனது நண்பனை அழைத்து வந்திருந்தான். நாட்கள் செல்ல செல்ல இந்த எண்ணிக்கை அதிகரித்தது என்று கூறுகிறார். தற்போது 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அவரிடம் பயின்று வருகின்றனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அவரிடம் படித்து முடித்து தற்போது நல்ல இடத்தில் வேலை செய்து வருகின்றனர்.

மேலும் இவரிடம் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கவும் முன்னாள் மாணவர்கள் உதவி செய்து வருகின்றனர். தனது ஊதியத்தில் மூன்றாக பிரித்து ஒரு பகுதியை இந்த மாணவர்களின் கல்விக்காகவும், ஒரு பகுதியை குடும்பத்தினருக்கும் மற்றொரு பகுதியை தனது உணவு, அடிப்படை தேவைகள் போன்றவற்றிற்கும் பயன்படுத்தி வருகிறார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் முழு நேரமும் மாணவர்களின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அயூப்பின் ஆசை.

மூலக்கதை