பொழிச்சலூர் ஊராட்சி பேரூராட்சியாக... தரம் உயருமா? மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி கிடைக்க வழி

  தினமலர்
பொழிச்சலூர் ஊராட்சி பேரூராட்சியாக... தரம் உயருமா? மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி கிடைக்க வழி

குரோம்பேட்டை : பேரூராட்சிக்கு நிகரான மக்கள்தொகை கொண்ட, பொழிச்சலுார் ஊராட்சியில், போதிய நிதி ஆதாரம் கிடைக்காமல், மேம்பாட்டு பணிகளை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்த, மாவட்ட நிர்வாகத்திற்கு, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில், 15 ஊராட்சிகள் உள்ளன. இதில், வார்டு மற்றும் மக்கள் தொகை அதிகம் கொண்ட, ஊராட்சியாக பொழிச்சலுார் உள்ளது.இந்த ஊராட்சி, அடையாற்றை ஒட்டியுள்ளதாலும், தாழ்வான பகுதி என்பதாலும், லேசான மழை பெய்தாலே வெள்ளத்தில் மிதக்கிறது.

கடந்த, 2015ல் பெய்த கன மழையில், இப்பகுதி அதிக அளவில் பாதிக்கப்பட்டது. மாநில நிதிக்குழு மற்றும் வரி வசூல் ஆகியவையே, இந்த ஊராட்சியின் பிரதான வருவாயாக உள்ளது. ஆனால், பேரூராட்சிக்கு நிகரான, வார்டுகள் உள்ளன.இதனால், மக்களுக்கு தேவையான சாலை, குடிநீர், வடிகால் போன்ற அடிப்படை வசதிகளை, போதுமான அளவிற்கு நிறைவேற்ற முடியவில்லை.

அவ்வப்போது, மாவட்ட நிர்வாகம், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை பெற்று, திட்டங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது.வார்டுகள் அதிகம் கொண்ட, இந்த ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்தினால், கூடுதல் நிதி கிடைக்கும். அதன் மூலம், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.இதனால், ஊராட்சியை தரம் உயர்த்த வேண்டும் என, அப்பகுதி மக்கள், 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் எனில், பம்மல் நகராட்சியை ஒட்டி, பொழிச்சலுார் உள்ளதால், பம்மலுடன் இணைத்து, பல்லாவரம் போன்று பெரிய நகராட்சியாக அறிவிக்கலாம் என்றும், யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.வார்டுகள் 15மக்கள் தொகை 40,000தெருக்கள் 350நகர்கள் 40வாக்காளர்கள் 30,000ஆண்டு வருவாய் 1 கோடி

நிதி அதிகரிக்கும்!
பொதுவாக, ஊராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சியாக மாறும் போது, பல வகைகளில் நிதி கிடைக்கும். இதன் மூலம், சாலை, குடிநீர் உள்ளிட்ட மக்களின் தேவைகளை, உடனுக்குடன் நிறைவேற்ற முடியும். உலக வங்கி கடன், சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதி, அரசு நிதி மற்றும் முத்திரை மானியம் கிடைக்கும்.

முத்திரை மானியம் நிறுத்தம்!
முத்திரை மானியம் என்பது, 1,000 ரூபாய் மதிப்பில் பத்திரப்பதிவு நடந்தால், 900 ரூபாய், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்கும். அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, இந்த நிதி கை கொடுக்கும். ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டு வந்த முத்திரை மானிய நிதி, 2006 முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை