ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் களமிறங்க தயாராகும் லசித் மாலிங்க!
இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாவது போட்டிகளில் அவர் பங்கேற்கவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
லசித் மாலிங்க தென்னாபிரிக்காவிலிருந்து நேரடியாக இந்தியாவுக்கு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அவர் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னரே இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் எதிர்வரும் 30ஆம் திகதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் லசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவுள்ள மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் லசித் மாலிங்க பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இலங்கையின் இறுதிக் குழாத்தைத் தெரிவு செய்வதற்காக மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
4 அணிகள் பங்குபற்றுதலோடு நடைபெறுகின்ற தொடரில் லசித் மாலிங்க, காலி அணியின் தலைவராக செயற்படுகின்றார்.
எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை மாகாண அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றதன் பின்னர் லசித் மாலிங்க மீண்டும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்காக இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
எவ்வாறாயினும், இவ்வருட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் 6 போட்டிகளிலும் லசித் மாலிங்க விளையாட மாட்டார் என இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.