புதிய சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்!
ஐ.பி.எல் அரங்கில் 300 சிக்சர்களை விளாசிய ஒரே ஒரு வீரராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் வரலாற்றில் பதிவாகியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனையை எட்டியுள்ளார்.
மொஹாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களைப் பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக குயின்டன் டி கொக் 60 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்டியா 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 40 ஓட்டங்களை விளாசினார்.
ஹர்திக் பாண்டியாவின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசியதன் மூலம் ஐ.பி.எல் அரங்கில் 300 சிக்சர்களை விளாசிய ஒரே ஒரு வீரராகப் பதிவானார்.
இறுதி வரை களத்தில் நின்ற லோகேஷ் ராகுல் 51 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தார். இதன்காரணமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது.