Porte de la Chapelle - அகதிகளுக்கிடையே மூன்று நாட்களாக குழு மோதல்! - 17 பேர் கைது!!
போர்த்து லா சப்பல் பகுதியில் அகதிகளுக்கிடையே இடம்பெற்ற குழு மோதலில், பலர் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் உயிருக்கு போராடி வருகின்றார்.
இந்த மோதல் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. முதலில் இரண்டு சிறு குழுக்களுக்கிடையே மோதல் வெடித்தது. இதில் கத்திக்குத்து சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது. தலையிட்ட காவல்துறையிர், மூவரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த தாக்குதல் இடம்பெற்று இரண்டு மணிநேரம் ஆன நிலையில், மீண்டும் மோதல் வெடித்தது.
இம்முறை ஆஃப்கானிஸ்தான் மற்றும் எரித்திரியாவைச் சேர்ந்த 50 அகதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி பெரும் மோதலில் ஈடுபட்டனர். மீண்டும் தலையிட்ட காவல்துறையினர், கண்ணீர் புகை வீசி அகதிகளை கலைத்தனர். இதில் 27 பேர் காயமடைந்தனர்.
மறுநாள் சனிக்கிழமை, மீண்டும் மோதல் வெடித்தது. இம்முறை காவல்துறையினருக்கு எதிராக அகதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் எட்டு அகதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமையும் தாக்குதல் இடம்பெற்று பலர் கைது செய்யப்பட்டனர். மொத்தமாக 17 பேர் மூன்று நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இப்பகுதியில் இருந்து 300 அகதிகளை காவல்துறையினர் வெளியேற்றிருந்தனர். அதன் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.