அன்னவாசல் அருகே 11ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

  தமிழ் முரசு
அன்னவாசல் அருகே 11ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் தாலுகா செல்லுகுடியில் பழமையான ஒரு கல்வெட்டு இருப்பதை எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் பூவரசன், தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரிரங்கன் அளித்த தகவலின்பேரில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன், தலைவர் மேலப்பனையூர் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் அந்த கல்வெட்டை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இந்த கல்வெட்டு, மன்னர்களுக்கு இணையாக திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்னும் வணிகக்குழுவின் மெய்க்கீர்த்தியுடன் உள்ளது. இதில் காலம் குறிப்பிடப்படவில்லை.

எனினும் முதலாம் ராஜேந்திர சோழன் பெயர் உள்ளதாலும் இந்த கல்வெட்டு கி. பி. 11ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது உறுதியாகிறது. ஐந்து அடி உயரமுள்ள ஒரு கல்லின் நான்கு பக்கமும் எழுதப்பட்டு உள்ளன.

இந்த கல்வெட்டில் 83 வரிகள் உள்ளன.

இதன் உச்சியில் சங்கு, செங்கோல், அரிவாள், குத்துவிளக்குகள் ஆகியவை கோட்டுருவமாக வரையப்பட்டு “பழியலி கள்ளிடைக்கொடி தலை” என எழுதப்பட்டு உள்ளது. இதை ராஜேந்திர சோழன் வலங்கை தலைமையின் சிறப்பு பெயராக கருதலாம்.

கல்வெட்டின் நான்காவது பக்கம் சிதைந்த நிலையில் உள்ளபோதிலும் இறுதி வரிகள் தெளிவாக உள்ளன.

இதில் குழுவினர் செல்லுக்குடிக்கு வழங்கிய கொடை பற்றிய செய்தியானது “குடுத்தோம் பதினெண் கொடி வீரகொடி வலங்கை வல்லபர் செல்விகுடிக்கு” என நிறைவு செய்யப்பட்டு உள்ளதன் மூலம் இந்த ஊருக்கு நற்பணி செய்வதற்கான சாசன கல்வெட்டாக இதனை கருதலாம் என்றனர்.

.

மூலக்கதை