எப்சி மெட்ராஸ் கால்பந்து அகடமி தொடக்கம்

  தினகரன்
எப்சி மெட்ராஸ் கால்பந்து அகடமி தொடக்கம்

சென்னை: எப்சி மெட்ராஸ் கால்பந்து அகடமி, மாமல்லபுரம் அடுத்த நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் 23 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகள் கொண்ட மைதானத்துடன்  தொடங்கப்பட்டுள்ளது. இது கிழக்கு ஆசியாவின் முதல் ஹைபிரிட் மைதானம், உடற்பயிற்சி மையம், மருத்துவ சிகிச்சை மற்றும் காயங்களிலிருந்து மீண்டு குணமடைவதற்கான சிகிச்சை மையங்கள், சர்வதேச தரத்தில் ஒரு உள்ளரங்க ஃபுட்ஸ்சால் மைதானம், 6 வரிசைகள் கொண்ட நீச்சல் குளம், நவீன சமையலறை மற்றும் உணவுக்கூடங்களுடன் கூடிய தங்கும் விடுதி, திறந்த நிலை பள்ளி கல்விக்கான தேசிய நிறுவன பாடத்திட்டத்தைப் பின்பற்றும் ஒரு மாற்றுவழி கற்றல் மையம் ஆகியவை இந்த வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வளாகத்தில் 130 இளம் வீரர்கள் வரை தங்கி படித்து, பயிற்சி பெறலாம்.  அவர்களது, கால் பந்தாட்ட பயிற்சி, கற்றல் தேவைகள் அனைத்தையும் முழுமையாகப் பூர்த்தி செய்யும் திறன் கொண்டதாக இது இருக்கும். திறனும், ஆர்வமும் மிக்க கால் பந்தாட்ட வீரர்களை தேடி கண்டறிவதற்கு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டத்தின் மூலம், திறமையான இளம் வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. சர்வதேச தரத்தில் சிறந்த வீரர்களை உருவாக்குவதும், இந்தியாவில் கால்பந்தாட்டத்திற்கு மிக சிறப்பான பயிற்சி வழங்கும் மையமாகவும் திகழ்வதே இந்த அகடமியின் நோக்கமாகும். அகடமியின் தொடக்கவிழாவில் நேற்று நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம் கலந்து கொண்டு கால்பந்தாட்ட வீரர்களுக்கு மைதானத்தை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, எப்சி மெட்ராஸ் அகடமியின் விளையாட்டு மற்றும் நிர்வாக இயக்குனர் தனஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை