'மாஜி' பிரதமர் இம்ரான் கட்சிக்கு தடை? தீவிர பரிசீலனையில் பாகிஸ்தான் அரசு

  தினமலர்
மாஜி பிரதமர் இம்ரான் கட்சிக்கு தடை? தீவிர பரிசீலனையில் பாகிஸ்தான் அரசு



இஸ்லாமாபாத், ''இம்ரான் கானின், பாக்., தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சிக்கு தடை விதிப்பது குறித்து, அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது,'' என, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்து உள்ளார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவர் இம்ரான் கான், 70. அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இவர், பாக்., தெஹ்ரீக் - இ - இன்சாப் என்ற கட்சியையும் நடத்தி வருகிறார்.

சமீபத்தில், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான இம்ரான் கானை, ஊழல் வழக்கு ஒன்றில், 'ரேஞ்சர்ஸ்' எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இதனால், பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

பாக்., அரசின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., தலைமை அலுவலகம், லாகூரில் உள்ள ராணுவ அதிகாரியின் வீடு மற்றும் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் புகுந்து போராட்டம் நடத்திய இம்ரான் கட்சியினர், அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இதற்கிடையே, இந்த வழக்கில் இம்ரானுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று, பாக்., ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இம்ரான் கானின் கட்சிக்கு தடை விதிப்பது குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனினும், இது குறித்து தீவிரமாக பரிசீலனை நடந்து வருகிறது. இம்ரானின் கட்சியை தடை செய்ய வேண்டும் என, அரசு முடிவு செய்தால், நிச்சயம், பார்லி., ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

இம்ரான் கான் ஆலோசனையின்படியே, ராணுவ தலைமையகம் மீது அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு அரசிடம் ஆதாரங்கள் உள்ளன. நாச வேலைகளை செய்து, ஒன்றுமே தெரியாதது போல், இம்ரான் கான் நாடகமாடுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்லாமாபாத், ''இம்ரான் கானின், பாக்., தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சிக்கு தடை விதிப்பது குறித்து, அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது,'' என, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்

மூலக்கதை